sooryavanshi become spinner and takes 2 wickets x
கிரிக்கெட்

பவுலராக மேஜிக் படைத்த சூர்யவன்ஷி.. ஒரே ஓவரில் 2 விக்கெட்! இந்திய அணியில் 10 ஆண்டாக இருக்கும் குறை!

பேட்டிங்கில் சோபிக்கவில்லை என தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இளம் கிரிக்கெட் மேதையான வைபவ் சூர்யவன்ஷி, தன்னுடைய பந்துவீச்சு திறமை மூலம் மீண்டும் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார்.

Rishan Vengai

துலீப் டிராபி காலிறுதியில் பேட்டிங்கில் 8 ரன்னுக்கு அவுடான சூர்யவன்ஷி, பந்துவீச்சில் அதிரடி காட்டி தலைப்புச் செய்தியாகிறார். கிழக்கு மண்டலத்துக்காக மெதுவான இடதுகை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்துவீச்சில் 3 ஓவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணியில் குறைந்துபோன பார்ட் டைம் பவுலர் பாரம்பரியத்தை அவர் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.

13 வயதில் ஐபிஎல் ஒப்பந்தத்தில் சைன் செய்யப்பட்டதிலிருந்தே வைபவ் சூர்யவன்ஷி ஆச்சரியத்தின் மறுஉருவமாகவே இருந்துவருகிறார். யாரும் கற்பனை செய்யமுடியாதளவு யூத் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் 49 சதங்கள், 100 சிக்சர்கள், அதிவேக சதம் என பல்வேறு வரலாற்று சாதனைகளை குவித்திருக்கும் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த எதிர்காலமாக பார்க்கப்படுகிறார். சச்சினுக்கு பிறகு இவ்வளவு சிறுவயதில் இந்திய ரசிகர்களின் கவனத்தையும், மனதையும் வென்ற மற்றொரு ஆளாக சூர்யவன்ஷி இருக்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷி

ஆனால் தன்னுடைய திறமையால் எல்லோரையும் கட்டிப்போட்டாலும், அவருடைய பேட்டிங்கிற்காக இந்திய ரசிகர்கள் காத்திருந்தாலும், ஏதாவது ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் கூட சூர்யவன்ஷி மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவருடைய யு19 பயணம், சர்வதேச அறிமுகம் கடந்து, ஏன் தற்போது நடந்துவரும் துலீப் டிராபியில் சறுக்கியபோது கூட சூர்யவன்ஷி மீது பாரபட்சமின்றி விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

சூர்யவன்ஷி - கபில்தேவ்

அவர் மிகவும் இளம் வீரர் அவருக்கு நேரம் கொடுங்கள், அவரை அழுத்தத்திற்கு தள்ளாதீர்கள் என கபில்தேவ் உட்பட பல முன்னாள் ஜாம்பவான்கள் கூறிவந்தாலும், சூர்யவன்ஷி சொதப்பும் ஒவ்வொரு போட்டியும் அவர் விமர்சிக்கப்படுகிறார்.

அந்தவகையில் தற்போது நடந்துவரும் துலீப் டிராபியில் கிழக்கு மண்டல அணிக்காக துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யவன்ஷி, வடகிழக்கு மண்டல அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் வெறும் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போதும் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்தசூழலில் தான் பேட்டிங்கில் சோபிக்காத சூர்யவன்ஷி தன்னுடைய பந்துவீச்சு திறமையால் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

பரபரப்பாக நடைபெற்ற கிழக்கு மண்டல மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளுக்கு இடையேயான துலீப் டிராபி காலிறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சூர்யவன்ஷியின் கிழக்கு மண்டல அணி, சுதீப் குமார் மற்றும் சபாஷ் அகமது இருவரின் சதத்தால் 467 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய வடகிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து ‘ஃபால்லோவ் ஆன்’ பெற்றது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடிய அந்த அணி இந்தமுறை 146 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் பவுலராக 3 ஓவர்களை வீசிய சூர்யவன்ஷி, ஒரு சுழற்பந்துவீச்சாளராக மேஜிக்கை நிகழ்த்தினார். தன்னுடைய மெதுவான இடது கை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சூர்யவன்ஷி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். 3 ஓவரில் 11 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியில் முன்பெல்லாம் சச்சின், சேவாக், கங்குலி, யுவராஜ் சிங், ரெய்னா போன்ற பார்ட் டைம் பவுலர்கள் நிறைய பேர் இருந்தனர். அது அணிக்கு நிறைய பலன்களை கொடுத்தது, ஆனால் தற்போது அந்த கலாச்சாரம் இல்லாததால் இந்திய அணி நிறைய சவால்களை சந்திப்பதாக சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், சூர்யவன்ஷி பவுலராகவும் தன்னை நிலைநிறுத்தியிருப்பது அவருக்கான எதிர்காலத்தை இன்னும் பிரகாசமாக்கியுள்ளது..