சோஷியல் மீடியா மூலம் பிரபலமான 20 வயது இளம் வீரர் இசாஸ் சவாரியா, 2026 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் ஏமாற்றமடைந்தார். தொழில்முறை கிரிக்கெட்டில் பங்கேற்காத அவர், தனிப்பட்ட பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
2026 ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்னதாகவே பல இளம்வீரர்களின் பெயர்கள் அதிகமாக பேசப்பட்டது. அதில் 20 வயது இளம் வீரரான இசாஸ் சவாரியா என்ற பெயர் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
தனது வாழ்வில் எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட்டையும் விளையாடாமலேயே ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் இடம்பிடித்த 20 வயது இளைஞர் இசாஸ் சவாரியாவின் பயணம் எல்லோரையும் கவர்ந்தது.
கர்நாடகாவை சேர்ந்த 20வயது வீரரான இசாஸ் சவாரியா, தனது வாழ்வில் எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. சுழற்பந்து வீச்சாளரான அவர், தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக தனிப்பட்ட பயிற்சி வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்துள்ளார்.
ஒருமுறை அவருடைய பயிற்சி வீடியோ இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத்தின் கவனத்தை ஈர்த்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான சுனில் ஜோஷி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்கவுட்களின் கவனத்தையும் ஈர்த்ததது.
அதன்பலனாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய அணிகளின் பந்துவீச்சு சோதனைகளுக்கும் அழைக்கப்பட்ட அவர், பஞ்சாப் அணியின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளார். இரண்டு பக்கமும் பந்தை நன்றாக திருப்பக்கூடிய இசாஸ் சவாரியா, பஞ்சாப் உதவியின் மூலம் 2026 ஐபிஎல் ஏலத்தில் பதிவுசெய்திருந்தார்.
அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு பதிவுசெய்திருந்த நிலையில், அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. நம்பிக்கையுடன் இருந்த வீரருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.