ஸ்மிரிதி மந்தனா x
கிரிக்கெட்

12 பவுண்டரி, 7 சிக்சர்.. 80 பந்தில் 135 ரன்கள் குவித்த ஸ்மிரிதி! அதிவேக சதமடித்து சாதனை!

அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 80 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் இந்திய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் போட்டிகள் ராஜ்கோட்டில் நடைபெற்றுவருகிறது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம்

முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என வென்ற ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.

80 பந்தில் 135 ரன்கள் குவித்து மிரட்டிய ஸ்மிரிதி..

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மற்றும் பிரதிகா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி 200 ரன்களை கடந்து மிரட்டியது.

ஸ்மிரிதி மந்தனா

ஒருபக்கம் பிரதிகா நிதானமாக விளையாட, மறுமுனையில் 12 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி 70 பந்தில் சதத்தை எடுத்துவந்து அசத்தினார். இதன்மூலம் அதிவேகமாக ஒருநாள் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிரிதி.

தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத ஸ்மிரிதி அடுத்த 10 பந்தில் 35 ரன்களை அடிக்க, இந்திய அணியின் போர்டில் ரன்கள் குவிய ஆரம்பித்தது. ஆபத்தாக விளங்கிய மந்தனாவை 135 ரன்னில் வெளியேற்றி பெருமூச்சுவிட்டனர் அயர்லாந்து அணியினர்.

ஸ்மிரிதி வெளியேறினாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரதிகா தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அபாரமாக விளையாடிய பிரதிகா 154 ரன்கள் அடித்து அசத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச டோட்டலாக 435 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.