சர் ரவீந்திர ஜடேஜா. இந்திய அணிக்கு யார் கேப்டனாக வந்தாலும், அது எந்த ஒரு போட்டியாக இருந்தாலும், கேப்டன்கள் விரும்பும் ஆல் ரவுண்டராக அணிக்குள் வருபவர் ஜடேஜா மட்டும்தான். பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஜடேஜா இருக்கும்வரை ஒரு ஓரத்தில் நம்பிக்கை இருக்கத்தான் செய்யும். ஆனால், சமீபத்தில் அவர் சிறப்பாகவே செயல்பட்டிருந்தாலும் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் நமது கவனத்தையும் ஈர்க்கின்றன.
முதலில் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவின் எண்களைப் பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா 157 இன்னிங்ஸில் 330 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். ‘அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் முக்கால்வாசி சொந்த மண்ணில் வீழ்த்தப்பட்டவை; வெளிநாடுகளில் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை’ என்பது அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. உதாரணத்திற்கு அவர் வீழ்த்திய 330 விக்கெட்களில் 238 விக்கெட்கள் (49 டெஸ்ட்கள்) சொந்த மண்ணில் வீழ்த்தப்பட்டது. ஆனால், வெளிநாட்டு மண்ணில் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 92 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். இதை வைத்துதான் அவர்மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால், ஜடேஜாவைப் பாராட்டுபவர்களோ வெளிநாட்டு மண்ணில் ஜடேஜாவின் செயல்பாடுகள் அத்தனை மோசமானதாக இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜடேஜா 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பாக, கும்ப்ளே, அஸ்வின், கபில் தேவ், ஹர்பஜன் போன்றோர் அடுத்தடுத்து இருக்கின்றனர். உதாரணத்திற்கு நான்காவது இடத்திலிருக்கும் ஹர்பஜன் சிங்கை எடுத்துக்கொள்வோமே. இந்தியாவில் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 265 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். வெளிநாட்டு மண்ணில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். வெளிநாடுகளில் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். வெளிநாட்டு மண்ணில் ஹர்பஜனின் சராசரி 36.57. ஆனால், ஜடேஜாவின் சராசரி 36.34. கொஞ்.......சம்தான் வேறுபாடு.. ஆனால், ஜடேஜாவின் பேட்டிங் திறமையோடு ஒப்பிட்டால் கபில்தேவ் மட்டுமே முன்னணியில் இருப்பவர்; மற்ற எல்லோரும் பந்துவீச்சாளர்களே.
அதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜடேஜா 2,648 ரன்களை எடுத்திருக்கிறார். இந்த 8 ஆண்டுகளில் அவரது டெஸ்ட் சராசரி 43.41 ஆக இருக்கிறது. அதேபோல் 141 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார். இந்த எண்கள் தற்போதைய சூழலில் மிகச் சிறப்பான ஆல் ரவுண்டர்களாகக் கருதப்படுபவர்களை விட ஜடேஜாவை ஒரு படி முன்னாள் வைத்திருக்கிறது.
எண்கள் சிறப்பாக இருந்தபோதும் மேட்ச் வின்னிங் திறமை அத்தனை சிறப்பாக இல்லை என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் ஜடேஜா மேல் வைக்கும் விமர்சனம். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, ஜடேஜா மன்செஸ்டரில் செஞ்சுரி அடித்து ஆட்டத்தை டிரா செய்ய உதவி செய்திருந்தாலும் அவர் கபில் தேவ் போல மேட்ச் வின்னர் அல்ல எனத் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், “கபில்தேவ் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு அதிகமான வெற்றிகளைத் தேடித்தந்திருக்கிறார். ஆனால், ஜடேஜா வெளிநாட்டு மைதானங்களில் supporting roleல்தான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவர் தனது ஓவர்களை விரைவாகவும் கட்டுப்பாட்டுடனும் வீசுகிறார். ஆனால் அவரால் மேட்ச் வின்னராக செயல்பட முடியவில்லை. இது முதல் டெஸ்டிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது” எனத் தெரிவித்திருக்கிறார். மூன்றாவது டெஸ்ட்டிலும் இதேபோன்ற பேச்சு எழுந்தது. ஆனால், அது விமர்சனமாக அல்லாமல், ‘ஜடேஜா தான் இந்தப்போட்டியை வென்று கொடுத்தார் என்று சொல்லும்படி ஒரு போட்டியும் இன்னும் அமையவில்லையே’ எனும் ரீதியில்தான் கருத்து தெரிவித்திருந்தனர்.
இங்கிலாந்தின் மொயின் அலி, “ஜடேஜா தனது பேட்டிங்கின் உச்சத்தில் இருக்கிறார். பந்து வீச்சைப் பொறுத்தவரை நன்றாகவே பந்துவீசியிருக்கிறார். ஆனால் விக்கெட்டுகள் மட்டும்தான் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார். நடப்பு தொடரில் 7 இன்னிங்ஸில் பந்துவீசியிருக்கும் ஜடேஜா 7 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். இதில் 4 விக்கெட்கள் ஒரே இன்னிங்ஸில் கிடைத்தவை.
இந்த இடத்தில்தான் குல்தீப்பின் தேவை எழுகிறது. குல்தீப் அணியில் இருப்பது தொடர்பாகப் பேசிய மொயின் அலி, “குல்தீப் யாதவை அணியில் வைத்திருக்கவே விரும்புவேன். ஆனால், யாருக்காக என்பது தெரியவில்லை. வாஷிங்டன் நன்றாக பேட்ட்டிங் செய்கிறார். ஜடேஜா நன்றாக பந்துவீசுகிறார். எனவே குல்தீப்பை அணியில் சேர்ப்பது கடினமாக உள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
எப்போதெல்லாம் இந்தியாவிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குல்தீப் யாதவ் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். கடந்த 8 வருடங்களில் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் குல்தீப் 56 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். இப்போது எழும் கேள்வி குல்தீப்பை யாருக்கு பதிலாகக் கொண்டு வருவது. டெஸ்ட் போட்டிகள் என்றாலே இந்திய அணி வேகப்பந்து வீச்சைத்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. ஆனால், மூன்றாவது அல்லது நான்காவது வேகப்பந்துவீச்சாளர் எதிரணிக்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியதில்லை. எனவே, இந்திய அணி ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் குறைத்துவிட்டு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்க வேண்டுமென்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
உதாரணத்திற்கு ஷர்துல் தாக்கூர் இந்திய அணிக்கு மூன்று அல்லது நான்காவது வேகப்பந்து வீச்சாளர்தான். நான்கில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று இன்னிங்ஸில் பந்து வீசியிருக்கிறார். ஆனால், மொத்தமாகவே 27 ஓவர்களை மட்டுமே வீசி 2 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். இது எப்படி அணிக்கு உதவுமென்று தெரியவில்லை.
கிரிக்கெட் வல்லுநர் ஆண்டி சால்ட்ஸ்மேன் மிக முக்கியமான விஷயம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். “India’s selection is skewed by Jadeja’s brilliance” என்கிறார். அதாவது, ஜடேஜா பவுலிங்கில் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்றாலும்கூட அவரது மொத்தத் திறமையை வைத்து அவர் தனது இடத்தை வைத்திருக்கிறார். இதுவே மற்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடம் இல்லாமல் ஆக்குகிறது என்கிறார் சால்ட்ஸ்மேன்.
ஜடேஜா அணியில் இருக்கும்போது இந்திய அணிக்கு ஒரு 'அதிகாரம்' இருப்பது போல உணர்வு ஏற்படக்கூடும். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் அவர் ஆட்டத்தினை மாற்றலாம்; அது பேட்டிங், பீல்டிங், பௌலிங் என எதிலும் நடக்கலாம். மூன்று துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருசில வீரர்கள்தான் உலகில் இருக்கின்றனர். ஜடேஜா ஒரு மேட்ச் வின்னரா இல்லையா என்பதில் விவாதம் தொடர்கிறது. ஆனால், அவர் இல்லாத அணியை கற்பனை செய்வது என்பது அந்த அணியின் சமநிலையை கேள்விக்குள்ளாக்குவதுபோல் தான் ஆகும். குல்தீப்பும் அணிக்குத் தேவைதான். அது இந்திய அணி பாரம்பரியமாக கடைபிடிக்கும் சில நடைமுறைகளை மாற்றிக்கொண்டாலே நடந்துவிடும். எனவே, விமர்சனம் ஜடேஜாவின் மீது இல்லாமல் தேர்வுக்குழு மேல் இருக்க வேண்டும்.