ஜடேஜா தேர்வு செய்யப்படுவதன் மூலம் வீரர்களின் தேர்வில் தவறு செய்கிறதா இந்திய அணி?
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி பின் தங்கியிருக்கிறது. இத்தகைய சூழலில், வீரர்களின் தேர்வு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக ப்ளேயிங் 11ல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பது விவாதத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில்தான், ப்ளேயிங் 11ஐத் தேந்தெடுப்பதில் சுப்மன் கில் இறுதி முடிவை எடுக்காமல் இருந்திருக்கலாம் என கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். வீரர்களின் தேர்வில் கேப்டனின் முடிவு மட்டுமே இறுதியாக இருக்க வேண்டுமென்றும், தலைமை பயிற்சியாளர் உட்பட வேறு யாராலும் அது பாதிக்கப்படக் கூடாது என்றும் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
உண்மையான பிரச்னைகள் வெளிவராமல் இருக்கலாம்
அவர் கூறுகையில், “ஒருவேளை சுப்மன் கில் ஷர்துலை அணியில் விரும்பாமல் குல்தீப்பை விரும்பியிருக்கலாம். குல்தீப்பை அணியில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சுப்மன் கில்தான் கேப்டன். மக்கள் அவரைப் பற்றியும் அவரது கேப்டன்சி பற்றியும் பேசுவார்கள். எனவே முடிவும் அவருடையதாகவே ஆக வேண்டும்.
அனைத்தும் நன்றாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக உண்மையான பிரச்சனைகள் வெளிவராமல் இருக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால் கேப்டன்தான் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அவர்தான் 11 பேரையும் வழிநடத்தும் தலைவர்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தனது காலத்திய விஷயங்களையும் கவாஸ்கர் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், “அந்த காலத்தில் எங்களுக்கு கோச்சுகள் எல்லாம் இல்லை. முன்னாள் வீரர்கள்தான் மேனேஜர்கள் அல்லது அசிஸ்டன்ட் மேனேஜர்களாக இருந்தார்கள். அவர்களிடம் நேரில் சென்று பேசலாம்; உணவு இடைவெளியில் அல்லது போட்டிக்கு முந்தைய நாளில் சில ஆலோசனைகள் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் தேர்வை திசை திருப்புகிறது
ஆனால், கிரிக்கெட் நிபுணர் Andy Zaltzman வேறொரு பரிமாணத்தை முன்வைக்கிறார். the observer இணைய இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், அணிக்குள் ஜடேஜாவைக் கொண்டு வருவதன் மூலம் வீரர்களின் தேர்வில் சில தவறுகள் நடப்பதாக Zaltzman தெரிவித்திருக்கிறார். “ஜடேஜாவின் ஆல் ரவுண்ட் திறமை இந்தியாவின் தேர்வை திசை திருப்புகிறது. இதன் காரணமாக இந்தியா தனது ஆபத்தான ஸ்பின்னர்களை விலக்கி வைக்கும் மரபு தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு உதாரணமாக அஸ்வின் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட பல்வேறு போட்டிகளை மேற்கோள் காட்டியிருக்கும் அவர், நடப்புத் தொடரில் நடந்த நான்கு டெஸ்ட்களிலும் குல்தீப்பை புறக்கணித்தது குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“அஸ்வின் மற்றும் குல்தீப்பை சேர்த்திருந்தால் அவர்கள் நன்றாக பந்துவீசியிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், அஸ்வினை மீண்டும் மீண்டும் தவிர்த்ததால் இந்தியா பல டெஸ்ட் போட்டிகளின் வாய்ப்புகளை இழந்திருக்கலாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 20.1 சராசரியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் குல்தீப். நடுத்தர வேக பந்துவீச்சு எடுபடாத ஒரு தொடரில் தொடரை மாற்றும் வைல்ட் கார்டாக இருக்கும் இவர்களை விட இரண்டு நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா விரும்புவது குழப்பம் ஏற்படுத்தக்கூடியதாய்தான் இருக்கும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்ட் வரலாற்றில் 3,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய 11 வீரர்களில் ஜடேகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜடேஜா 129 இன்னிங்ஸில் 3759 ரன்களைக் குவித்திருக்கிறார். அவரது சராசரி 37.22 ஆக இருக்கிறது. பந்துவீச்சிலும் 157 இன்னிங்ஸில் 330 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.