சுனில் கவாஸ்கர் - சுப்மன் கில் web
கிரிக்கெட்

733* ரன்கள்| சுனில் கவாஸ்கர் சாதனை முறியடிப்பு.. புதிய வரலாறு படைத்த சுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 733 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார் இந்திய கேப்டன் சுப்மன் கில்.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல்முறையாக டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில், ஒரு பேட்ஸ்மேனாக சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தொடருக்கு முன்புவரை இங்கிலாந்து மண்ணில் சுப்மன் கில் சொதப்பிவிடுவார் என்று சொல்லப்பட்ட கூற்றை மாற்றி, நடப்பு தொடரில் 3 சதங்கள், ஒரு இரட்டை சதம் உட்பட 733* ரன்களை குவித்து மிரட்டியுள்ளார் கில்.

சுப்மன் கில்

இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டனாக சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார் சுப்மன் கில்.

சுனில் கவாஸ்கர் சாதனை முறியடிப்பு..

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடிவருகிறது.

4 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ள நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

சுப்மன் கில்

முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 72 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் களத்தில் 15 ரன்கள் அடித்து விளையாடிவரும் சுப்மன் கில், தொடரில் 733* ரன்களை கடந்தபோது சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார்.

1978-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக விளையாடிய சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் அடித்த அதிகபட்ச ரன்களாக அந்த சாதனை இருந்த நிலையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதனை உடைத்துள்ளார் சுப்மன் கில்.

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன்கள்:

* 733* ரன்கள் - சுப்மன் கில் vs ENG - 2025

* 732 ரன்கள் - சுனில் கவாஸ்கர் vs WI - 1978/79

* 655 ரன்கள் - விராட் கோலி vs ENG - 2016/17

* 610 ரன்கள் - விராட் கோலி vs SL - 2017/18

* 593 ரன்கள் - விராட் கோலி vs ENG - 2018