2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது டிசம்பர் 21 முதல் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 18ம் தேதிவரை நடைபெறுகிறது. இதற்கான மும்பை அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 21-ம் தேதியான இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.
2024-2025 விஜய் ஹசாரே கோப்பையின் முதல் சுற்றானது இன்று தொடங்கிய நிலையில், முதல் போட்டி மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடியது.
டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய மும்பை அணி பேட்டிங் செய்தது. டாப் ஆர்டரில் களமிறங்கிய ஆயுஸ் மத்ரே (78 ரன்கள்), ஹர்திக் தாமோர் (84 ரன்கள்) இருவரும் அரைசதமடித்து அசத்த, 4வது வீரராக களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
10 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், 5 பவுண்டரிகளுடன் 55 பந்தில் 114 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியாக களத்திற்கு வந்த ஷிவம் துபேவும் அவருடைய பங்கிற்கு 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசி 36 பந்துக்கு 63 ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 382 ரன்களை குவித்தது மும்பை அணி.
சமீபகாலமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கான இடம் இந்திய அணியில் தொடர்ந்து கிடைக்காத நிலையில், தன்னுடைய இருப்பை தேர்வுக்குழுவுக்கு தெரியும்படி தொடர்ந்து அபாரமாக விளையாடிவருகிறார்.
383 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிவரும் கர்நாடகா அணி, 30 ஓவரில் 226 ரன்கள் எடுத்து பதிலடி கொடுத்துவருகிறது. இன்னும் அந்த அணி வெற்றிபெற 20 ஓவருக்கு 157 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகளை கொண்டுள்ளது.
தமிழ்நாடு அணி விளையாடிய முதல் போட்டி மழையின் காரணமாக டாஸ் போடப்படாமலே ரத்துசெய்யப்பட்டது.