டாப் 10 ஸ்போர்ட்ஸ்
டாப் 10 ஸ்போர்ட்ஸ்PT

Top 10 Sports | “சச்சின், கவாஸ்கருக்கு நிகரான அஸ்வின்” முதல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அட்டவணை வரை!

ஒவ்வொரு நாளும் உலகில் ஆயிரம் விஷயங்கள் நடைபெறுகின்றன. அதில் முக்கியமானவையாக சிலதான் இருக்கும். அப்படி விளையாட்டில் Top 10-ல் வரும் முக்கியமான சில செய்திகளை இங்கே பார்ப்போம்.

1. சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்..

திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அதுகுறித்து பேசியிருக்கும் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் கபில்தேவ், “நான் அணியில் இருந்திருந்தால் அஸ்வினுக்கு தகுந்த மரியாதையை கொடுக்காமல் வெளியேற்றியிருக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

இதுகுறித்து பேசுகையில், “இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கருக்கு நிகரான வீரர் அஸ்வின். அவர் ஓய்வு பெறும் போது நான் இந்திய அணியுடன் இருந்து இருந்தால் அவரை இப்படி சாதாரணமாக அனுப்பி இருக்க மாட்டேன். அவருக்கு உரிய மரியாதையை அளித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்திருப்பேன்” என கூறியுள்ளார்.

2. புரோ கபடி லீக்: புனேரி பால்டன் அணியை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ்!

11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற புனேரி பால்டன் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் இடையிலான போட்டியில் 48-36 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

3. சச்சின் பகிர்ந்த சிறுமியின் பவுலிங் வீடியோ..

சுஷீலா மீனா என்ற சிறுமி பந்துவீசும் வீடியோவை பகிர்ந்திருக்கும் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர், ஜாகீர் கானின் பவுலிங் ஆக்சனை, சிறுமி அப்படியே கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்தீர்களா என ஜாகீர் கானுக்கும் டேக் செய்துள்ளார் சச்சின்.

4. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ISL).. மோகன் பகான் அணியை வீழ்த்திய எப்.சி. கோவா!

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றிபெற்றது.

5. 21-ம் நூற்றாண்டில் முதல் அணியாக பாகிஸ்தான் சாதனை!

தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் மூலம் 2000-க்கு பிறகு தென்னாப்பிரிக்கா மண்ணில் இரண்டு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

6. புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர்!

11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

7. 2024 FIFA இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை.. ரியல் மாட்ரிட் சாம்பியன்!

2024 ஃபிஃபா இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பச்சுகாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ரியல் மாட்ரிட்.

8. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் தலைமை பயிற்சியாளர் அதிரடி நீக்கம்!

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் 13 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், இதுவரை விளையாடியிருக்கும் 11 ஆட்டங்களில் 8 தோல்வி, 1 டிரா மற்றும் 2 வெற்றியை மட்டுமே பெற்றிருக்கும் ஐதராபாத் எப்.சி. அணி புள்ளிப்பட்டியலில் 12-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் அவ்வணியின் மோசமான செயல்பாடுகளை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் தங்போய் சிங்டோ அதிரடியாக நீக்கப்பட்டார்.

9. ஸ்டம்பை எட்டி உதைத்த கிளாசனுக்கு அபராதம்..

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 97 ரன்களில் இருந்த கிளாசன் சதத்தை தவறவிட்டு அவுட்டானார். அப்போது அவர் விரக்தியில் ஸ்டம்புகளை எட்டி உதைத்தார்.

ஐசிசி விதிகளை மீறியதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 15% அபராதம் மற்றும் ஒரு டிமெரி புள்ளியையும் ஐசிசி விதித்துள்ளது.

10. 2025 மேஜர் லீக் சாக்கர் கால்பந்து: மெஸ்ஸியின் இன்டர் மியாமியின் போட்டி அட்டவணை!

2025 மேஜர் லீக் சாக்கர் கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமியின் போட்டி அட்டவணை குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் பிளேய் ஆஃப் முதல் சுற்றில் அட்லாண்டாவிற்கு எதிரான தோல்வியை சந்தித்து வெளியேறிய இன்டர் மியாமி, இந்த முறை முதல் போட்டியில் நியூ யார்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறுகின்றது.

இதைத்தொடர்ந்து அட்லாண்டா யுனைடெட் அணியுடன் மார்ச் 16 ஆம் தேதி மோதுகிறது. அந்த போட்டியில் கடந்தமுறை அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மெஸ்ஸியின் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com