இந்திய அணியின் திலக் வர்மா காயம் காரணமாக டி20 தொடரில் பங்கேற்க முடியாத நிலையில், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்பின் படி, திலக் வர்மா முழு உடற்தகுதியை மீண்டும் பெறுவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்தசூழலில் ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு டி20 தொடரில் பழிதீர்த்துவரும் இந்திய அணி, நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளிலும் அபார வெற்றியை பதிவுசெய்து 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. 2வது போட்டியில் 15 ஓவரில் வெற்றிபெற்ற இந்தியா, நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் 10 ஓவரில் இலக்கை எட்டி நியூசிலாந்தை நசுக்கியது.
இந்நிலையில் காயம் காரணமாக இந்திய வீரர் திலக் வர்மா டி20 தொடரில் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தசூழலில் கடைசி 2 போட்டிக்கு திலக் வர்மா திரும்பிவிடுவார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது திலக் வர்மா குறித்த அப்டேட்டை பிசிசிஐ தெரிவித்துள்ளது.
திலக் வர்மா குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, இந்திய வீரர் திலக் வர்மா காயத்திலிருந்து மீண்டு தன்னுடைய உடல் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். பிசிசிஐ சிறப்பு உடல்பயிற்சி மையத்தில் நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறார். இருப்பினும், முழு உடற்தகுதியை அவர் மீண்டும் பெறுவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால், நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்.
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக, பிப்ரவரி 3ஆம் தேதி முழு உடற்தகுதியை எட்டியவுடன் திலக் வர்மா மும்பையில் அணியுடன் இணைவார் .
இந்தசூழலில் நியூசிலாந்து தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கு திலக் வர்மாவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரே தொடர வேண்டும் என்று ஆண்கள் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது” என தெரிவித்துள்ளது.
இதன்மூலம் திலக் வர்மா இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை, அதேநேரம் 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக எட்டிவிடுவார் என பிசிசிஐ எதிர்ப்பார்க்கிறது. சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவரை பெஞ்சில் அமரவைத்துவிட்டு கடைசி 2 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.