14 பந்தில் அரைசதம்.. 10 ஓவரில் ஆட்டம் க்ளோஸ்.. 3-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில், இந்தியா 3-0 என வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 14 பந்தில் அரைசதமடித்து அசத்தியதுடன், இந்திய அணி 10 ஓவரில் 154 ரன்கள் இலக்கை எட்டியது. பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று உள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடந்துவருகிறது.
10 ஓவரில் 154 ரன்களை அடித்த இந்தியா..
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 153 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
154 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே பவுல்டாகி ஏமாற்றினாலும், தொடர்ந்து வந்த இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட இஷான் கிஷன் 28 ரன்னில் வெளியேற, மறுமுனையில் 14 பந்தில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு அரைசதமடித்தார் அபிஷேக் சர்மா. தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் 25 பந்தில் அரைசதமடிக்க இந்திய அணி 154 ரன்கள் இலக்கை 10 ஓவரிலேயே எட்டி அசத்தியது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 போட்டிகளின் முடிவிலேயே 3-0 என கைப்பற்றியது இந்திய அணி.

