Shardul Thakur
Shardul Thakur  BCCI
கிரிக்கெட்

ரஞ்சி பைனல்: 37 பந்தில் அரைசதம் விளாசல்.. மீண்டும் மும்பை காப்பானாக மாறிய ஷர்துல் - 75 ரன் குவிப்பு!

Rishan Vengai

2024 ரஞ்சிக்கோப்பை தொடரானது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது இறுதிப்போட்டியை கண்டுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம் முதலிய 4 அணிகள் அரைறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

முதல் அரையிறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

2024 ranji trophy final

இந்நிலையில் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வுசெய்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.

116 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறிய மும்பை!

பிரித்வி ஷா, முஷீர் கான், அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் கிளாஸ் வீரர்கள் இருந்தாலும் மும்பை அணி 116 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. தொடக்கவீரர்கள் பிரித்வி ஷா மற்றும் பூபென் லால்வானி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் கொடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். பிரித்வி ஷா 46 ரன்களில் போல்டாகி வெளியேற, சிறுதுநேரத்தில் 37 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் லால்வானி.

இரண்டு தொடக்கவீரர்களும் ஏற்படுத்தி கொடுத்த அற்புதமான தொடக்கத்தை பயன்படுத்தி கொள்ளாத, ’முஷீர் கான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் தாமோர்’முதலிய மிடில் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஓரிலக்க ரன்களில் வெளியேறி ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினர். 116 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.

மீண்டும் ஒரு அரைசதம்... காப்பானாக மாறிய ஷர்துல் தாக்கூர்!

6 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்த மும்பை அணியை 7வது வீரராக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் காப்பாற்ற போராடினார். தமிழ்நாடு அணிக்கு எதிராக நல்ல பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர் இதேநிலையில் இருந்த மும்பை அணியை மீட்டு, தானும் சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காத ஷர்துல் தாக்கூர் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 37 பந்துகளில் அரைசதமடித்தார். இறுதியில் 69 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஷர்துல் தாக்கூரை வெளியேற்றிய உமேஷ் யாதவ் ஆட்டத்தை முடித்துவைத்தார். 10 விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 224 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பையை தொடர்ந்து களமிறங்கிய விதர்பா அணியை, பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் கலக்கி போட்டார் ஷர்துல் தாக்கூர். தொடக்கவீரர் துருவ் ஷோரேவை 0 ரன்னில் வெளியேற்றிய ஷர்துல் 1-1 என நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அவரை தொடர்ந்து பந்துவீசிய குல்கர்னி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது விதர்பா அணி. முதல்நாள் முடிவில் விதர்பா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது.