இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய பும்ராவின் பந்துவீச்சை சஞ்சு சாம்சன் புகழ்ந்து பேசினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பும்ராவின் பவுலிங் இந்திய அணியின் அழுத்தத்தை குறைத்து, வெற்றியை உறுதிசெய்தது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் 89 ரன்கள் அதிரடி ஆட்டத்தால் 253 ரன்கள் குவித்தது.
254 ரன்கள் என்ற இமாலய இலக்கு என்றபோதும் இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியின் இளம்வீரர் பெத்தெல் 48 பந்தில் 105 ரன்கள் அடித்து மிரட்டினார். கடைசி போராடிய இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
89 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “ஆட்ட நாயகன் விருது உண்மையில் பும்ராவுக்கு தான் கொடுக்கணும்.. அவர் இல்லை என்றால் நான் இங்கு நின்றிருக்க முடியாது, ஒரு தலைமுறைக்கான சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா” என்று புகழ்ந்து பேசினார்.
இங்கிலாந்து அணியின் பெத்தல் மற்றும் சாம் கரன் இருவரும் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தபோது 18வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா இந்தியா மீதிருந்த அழுத்தத்தை குறைத்தார். அவருடைய பவுலிங் அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவிற்கு இருந்த அழுத்தத்தை நீக்கியது. பும்ராவின் பந்துவீச்சை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.