சஞ்சு சாம்சன், சச்சின் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

உடைந்துபோன மனம்.. உயர்வுக்கு வழி ஏற்படுத்திய சச்சின்.. நெகிழ்ந்து பேசிய சஞ்சு சாம்சன்!

தனது வெற்றிக்குக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செய்த ரகசிய உதவி குறித்து சஞ்சு சாம்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.

Prakash J

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் ஆனது. இதில் தொடர் ஆட்டநாயகன் விருதை சஞ்சு சாம்சன் வென்றார். பின்னர், பேட்டியளித்த அவர், தன்னுடைய இந்த எழுச்சிக்கு சச்சின் டெண்டுல்கரின் வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் உதவியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி, டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக உச்சி முகர்ந்திருக்கிறது. இதையடுத்து, இந்திய அணிக்கும் உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த வெற்றியின் பங்களிப்பில் இந்திய அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் இருந்தாலும், முக்கியக் காரணமாக இருந்தவர் சஞ்சு சாம்சன் என்று சொன்னால் மிகையாகாது. அரையிறுதிக்குள் இந்திய அணியை அழைத்துச் சென்றதிலும், அரையிறுதிக்குப் பிறகு இறுதிப்போட்டி வரை அவர் செயலாற்றிய விதத்திற்குப் பின்னாலேயே இந்திய அணி, இன்று கோப்பையைக் கையில் ஏந்தியிருக்கிறது.

sanju samson

அதனால்தான், இந்திய அணியின் பாராட்டுகளுக்கு மத்தியில் சஞ்சு சாம்சனின் புகழும் உலகளவில் பறக்கிறது. ஆனால், இந்தத் தொடருக்கு முன்பு, அவரிடம் திறமையிருந்தும் பல சமயங்களில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருந்தார். தேர்வு செய்யப்பட்டாலும், ஆடும் லெவனில் இடம்பிடிக்க முடியாமல் தவித்தார். தற்போதைய தொடரில்கூட அவர் லீக் போட்டிகளில் (ஒன்றிரண்டைத் தவிர) இடம்பிடிக்கவில்லை. இந்த நிலையில், தன்னுடைய கடந்த காலம் குறித்தும், ஜாம்பவான் சச்சின் வழிகாட்டுதல் குறித்து வாய் திறந்தார்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், ”இது ஒரு கனவு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும் உணர்கிறேன். என் உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தத் தருணத்திற்காகத்தான் நான் நீண்ட காலமாக உழைத்து வந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கான விதை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விழுந்துவிட்டது. கடந்த 2024 உலகக் கோப்பை அணியில் நான் இருந்தும், போட்டிகளில் விளையாடும் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதிருந்தே, நான் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவது போலவும், கோப்பையை வெல்வது போலவும் தொடர்ந்து மனதிற்குள் காட்சிப்படுத்திப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நான் சரியாக விளையாடாதபோது, என் மனம் முழுமையாக உடைந்து போனது. என் கனவுகள் அனைத்தும் சிதறிவிட்டதாக நினைத்தேன். அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தேன். ஆனால், கடவுள் எனக்காக வேறு ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், தைரியமாகக் கனவு காண்பதைக் கைவிடக் கூடாது என்பதற்கு நானே சாட்சி. அந்தக் கனவு காண்பதற்கான துணிச்சல் எனக்கு இருந்ததால்தான், இன்று இந்தக் கோப்பை என் கையில் உள்ளது. எனது இக்கட்டான நேரத்தில் முன்னாள் வீரர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு உதவினர். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக நான் சச்சின் டெண்டுல்கர் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். அவரிடம் பலமுறை நீண்ட நேரம் உரையாடினேன். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவானிடமிருந்து ஆலோசனையும், வழிகாட்டுதலும் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதைவிடப் பெரியது வேறு எதுவும் இல்லை. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.