வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஜெய்ஸ்வால் தன்னுடைய இரட்டை சதத்தை தவறவிட்டு 175 ரன்னில் அவுட்டாக சுப்மன் கில்லே காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. அப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாளில் தொடக்கத்தில் ஆட்டத்தை தொடங்கிய ஜெய்ஸ்வால் எப்படியும் இரட்டை சதத்தை நிறைவுசெய்துவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அப்படி இரட்டை சதமடித்திருந்தாலும் அது அவருடைய 3வது இரட்டைசதமாகவும், இதை செய்த 6வது இந்திய வீரராகவும் ஜெய்ஸ்வால் சாதனை படைத்திருப்பார்.
ஆனால் 175 ரன்னில் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்துவிட்டு ஒரு ரன்னுக்கான அழைப்பை கில்லுக்கு கொடுத்துவிட்டு வேகமாக ஓடத்தொடங்கினார். ஆனால் சுப்மன் கில் பந்தை பார்த்தபிறகு ஓடத்தயராகிவிட்ட பின்னரே அழைப்பு மறுப்பு தெரிவித்தார். அதற்குள் ஜெய்ஸ்வால் நான் ஸ்டிரைக்கர் முடிவிற்கே ஓடிவந்துவிட்டார். மீண்டும் திரும்பி செல்வதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டு விரக்தியுடன் வெளியேறினார்.
சுப்மன் கில்லின் இந்த செயலுக்காக ரசிகர்கள் பலர் விமர்சித்துவரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பாங்கரும் கில்லை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேரலையில் பேசியிருக்கும் அவர், “ஷாட் விளையாடி முடிக்கப்பட்டு ஜெய்ஸ்வால் ரன்னிற்கு தயாராகிவிட்டார், ஆனால் சுப்மன் கில் பந்தைப் பார்த்துவிட்டு, நான்-ஸ்ட்ரைக்கர் முனையிலிருந்து ரன் ஓட தொடங்கிவிட்ட பின்னர் 'நோ' என்று கூறினார். ஜெய்ஸ்வால் ஷாட்டை அடித்த வேகத்தைப் பார்த்த கில், வேண்டாம் என்ற முடிவை அப்போதே சொல்லிருக்கலாம். அழைப்பு ஜெய்ஸ்வால் உடையது, அவர்தான் ஆபத்தான பக்கத்திற்கு செல்லப்போகிறார். நான் ஸ்டிரைக்கர் அந்த ரன்னிற்கு சென்றிருக்க வேண்டும்” என்று ஜியோஹாட்ஸ்டாரில் பங்கர் கூறினார்.