sai sudharsan web
கிரிக்கெட்

”டிசம்பர் 31.. என்னால அழுகையை நிப்பாட்டவே முடியல..” சாய் சுதர்சனை மாற்றிய அந்த நாள்!

நல்ல கிரிக்கெட் விளையாடி அதிக ரன்கள் அடித்தபோதும் யு19 தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கப்பட்ட போது உடைந்து அழுததை சாய் சுதர்சன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Rishan Vengai

அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்த சாய் சுதர்சன், மெலிந்த உடலமைப்பு, ஃபிட்னஸ் குறைவு என்ற காரணங்களால் தமிழ்நாடு யு19 அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2018 டிசம்பர் 31 அன்று இடியாய் விழுந்த இந்த அதிர்ச்சியால் முழு நாளும் அழுத அவர், 2019 யு19 உலகக்கோப்பை கனவு உடைந்த வேதனையை உழைப்பாக மாற்றினார். ஐபிஎல் மூலம் தன் திறமையை நிரூபித்து, இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் விளையாடிய நம்பர் 3 இடத்தை தக்கவைத்துள்ளார்.

கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மீது கட்டப்பட்ட ஒரு கதை சாய் சுதர்சன் உடையது. இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு, கிரிக்கெட் மட்டுமே உலகமாக விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன், அதிக ரன்கள் அடித்த வீரராக மாறியபோதும் யு19 அணியிலிருந்து நீக்கப்பட்டது அவருடைய நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்திருந்தது.

எல்லாமே சரியாதான பண்ணினோம், நம்ம தான் அதிக ரன்கள் அடிச்சிருக்கோம், இதுக்கும் மேல என்ன பண்ணணும், இங்க இருந்து எப்படி இந்தியாவிற்காக விளையாட போறோம் என்ற பேரிடிக்கு பிறகு மீண்டுவந்தவர் தான் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சன்

2018 டிசம்பர் மாதம் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தபோதும் சாய்சுதர்சன் தமிழ்நாடு யு19 அணியிலிருந்து அவருடைய உடலமைப்பு சரியில்லை என்பதற்காக நீக்கப்பட்டார். மெலிந்த உடலமைப்பு கொண்டவர், ஃபிட்னஸ் இல்லாதவர் என்று புறக்கணிக்கப்பட்ட சாய் சுதர்சன், டிசம்பர் 31 அன்று அழுது முடித்தபிறகு தன்னை தகவமைத்து கொண்டு இன்னும் கடினமாக உழைத்து தனக்கான இடத்தை இந்திய அணியில் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கோபிநாத் உடனான உரையாடலில் பேசியிருக்கும் சாய் சுதர்சன், “அப்போது நான் தான் அதிகரன்கள் அடித்த வீரராக இருந்தேன், ஆனாலும் நான் நீக்கப்பட்டேன். அது எனக்கு பெரிய இடியாக விழுந்தது, என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. 2019 யு19 உலகக்கோப்பையும் இருந்ததால் எல்லாம் கனவுமாதிரி உடைந்தது. அன்று டிசம்பர் 31, மறுநாள் புதிய வருடம் பிறக்கவிருந்தது. அன்று முழுவதும் அழுதுமுடித்துவிட்டு, இனி இந்தியாவிற்காக விளையாடவேண்டுமானால் என்ன செய்யவேண்டும், என்னை எப்படி தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உழைக்க ஆரம்பித்தேன்” என பேசியுள்ளார்.

அங்கிருந்து தன்னுடைய திறமையை மேலும் மேலும் மெருகேற்றிய சாய் சுதர்சன், ஐபிஎல்லில் சிறந்து விளங்கியதோடு, இந்திய அணிக்காக டெஸ்ட் கேப்பையும் பெற்று அசத்தியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் விளையாடிய நம்பர் 3 பொஷிசனில் சாய் சுதர்சன் விளையாடிவருகிறார்.