\
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்web

“அயர்லாந்திடம் தோற்றதற்காக இந்தியாவை இழிவாக பேசாதீங்க..” - அஸ்வின்

அயர்லாந்திடம் தோற்றதற்காக இந்திய அணியோ இந்திய வீரர்களோ மோசமான வீரர்களாகவும் மோசமான அணியாகவும் மாறிவிடாது, சச்சின், ராகுல் டிராவிட் இருந்தபோது கென்யாவிடம் இந்தியா தோற்கவில்லையா என ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
Published on
Summary

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆன இந்திய அணியை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்துகிறார். 1050 நாட்களுக்கு பிறகு தொடரை இழந்தாலும், இது கிரிக்கெட்டை இத்தாலி, பிரான்ஸ் போன்ற புதிய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் நல்ல முன்னேற்றம் என அவர் கூறுகிறார். தோல்வியால் வீரர்களை இழிவுபடுத்தும் கலாச்சாரத்தை அவர் கண்டிக்கிறார்.

சமீபத்தில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி 0-2 என இரண்டு போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. கிட்டத்தட்ட 16 இருதரப்பு டி20 தொடர்களில் தோல்வியே காணாத இந்திய அணி, 1050 நாட்களுக்கு பிறகு டி20 தொடரை இழந்தது.

அயர்லாந்திடம் டி20 தொடரை இழந்தது பெரிய விசயம் இல்லை என்றாலும், 2026 டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு நடத்தப்பட்ட முதல் டி20 தொடரில் முழு பலமான அணியை இறக்கியபோதும் ஒயிட்வாஷ் ஆனது பேசுபொருளாக மாறியது. கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், கவுதம் கம்பீர் மற்றும் இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்திய டி20 அணி
இந்திய டி20 அணி

இந்தசூழலில் தான் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “அயர்லாந்திடம் இந்தியா தோற்றது நல்ல விசயம் தான், இந்த தோல்வி கிரிக்கெட்டை இன்னும் கிரிக்கெட் விளையாட நாடுகளுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கிரிக்கெட் விளையாட உள்ளே வரும். இது அனைத்தையும் தாண்டி என்னால் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள முடியவில்லை, டாஸ் போடுவதற்கு முன்புவரை ஒரு வீரரை தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள், அதே வீரர் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். கிரிக்கெட் வெற்றிபெறுவதற்கு மட்டும் தானா, சச்சின், ராகுல் டிராவிட் போன்ற கிரேட்டஸ்ட் வீரர்கள் விளையாடிய போது கென்யாவிடம் தோற்கவில்லை. தலைசிறந்த வீரர்களாக நாம் பார்ப்பவர்கள் கூட 10 போட்டிகளில் 4-ல் தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அதனால் இந்திய அணியையும், இந்திய வீரர்களையும் இழிவாக பேசாதீர்கள்” என கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com