ahswin 500 wickets
ahswin 500 wickets BCCI
கிரிக்கெட்

மில்லியனில் ஒரு பவுலர்; வாழ்த்துக்கள் சாம்பியன்! - 500 விக். வீழ்த்திய அஸ்வினுக்கு குவியும் பாராட்டு

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சாக் கிராவ்லியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல் சாதனையை எட்டினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய உலக கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708), ஜேமி ஆண்டர்சன் (696), அனில் கும்ப்ளே (619), ஸ்டூவர்ட் பிராட் (604), க்ளென் மெக்ராத் (563), வால்ஸ் (519), நாதம் லயன் (517) முதலிய 8 வீரர்களுக்கு பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய 9வது உலக பவுலராக அஸ்வின் மாறியுள்ளார்.

ashwin 500

அதுமட்டுமல்லாமல் 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் மற்றும் அனில் கும்ப்ளேவிற்க்கு பிறகு இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு “வாழ்த்துக்கள் சாம்பியன்” என பாராட்டு தெரிவித்துள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

மில்லியனில் ஒரு பவுலர்! வாழ்த்துக்கள் சாம்பியன்!

எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர், “அஷ்வின் என்ற ஸ்பின்னரில், எப்போதும் ஒரு வெற்றியாளர் இருந்தார் (In AshWIN the SpinNER, there was always a WINNER). டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்பது மிகப்பெரிய மைல்கல். வாழ்த்துக்கள், சாம்பியன்!” என்று பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொள்வதை நிறுத்தாதவர் அஸ்வின் என்று வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் அனில் கும்ப்ளே, “கற்றுக்கொள்வதை நிறுத்தாத ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மகத்தான சாதனையில், மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் இணைந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அஸ்வின்!” என்று பாராட்டியுள்ளார்.

சாதனைகளை முறியடிக்கும் சென்னையின் சொந்த பையன் என்று பாராட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், “இமாலய சாதனைகளை முறியடித்து புதிய கனவுகளை உருவாக்கியுள்ளார், எங்கள் சென்னையின் சொந்த பையன் அஸ்வின்!

ஒவ்வொரு திருப்பத்திலும், அவருடைய நிலையான உறுதிப்பாடு மற்றும் திறமையை கொண்டு புதிய வெற்றி கதைகளை உருவாக்குகிறார். இது ஒரு உண்மையான ஸ்பின்டாகுலர் மைல்கல்லைக் குறிக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாகப் பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள்” என்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.