"அறிமுக போட்டியில் இப்படி விளையாட தைரியம் தேவை" - சர்ஃபராஸ் கானை பாராட்டிய முன். இங்கிலாந்து கேப்டன்

தன்னுடைய முதல் போட்டியிலேயே பயமில்லாமல் இங்கிலாந்தை திணறடித்த சர்ஃபராஸ் கான் அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறார்.
sarfaraz khan
sarfaraz khanICC

நீண்டகால போராட்டத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சர்ஃபராஸ் கான், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய அறிமுக இன்னிங்ஸில் இன்று களமிறங்கினார்.

கேப்டன் ரோகித் சர்மாவின் 131 ரன்கள் ஆட்டத்திற்கு பிறகு களமிறங்கிய சர்ஃபராஸ் கான், ”அவன் கண்ணுல பயமில்ல” என்பது போல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஞ்சிக்கோப்பையில் விளையாடி விளையாடி இந்தியாவின் எந்த மைதானத்திலும் எப்படி ரன்களை குவிக்க வேண்டும் என தெரிந்து வைத்திருந்த சர்ஃபராஸ் கான், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

sarfaraz khan
sarfaraz khan

ஸ்வீப், லேட் கட், ஸ்டிரைட் ஹிட், ஸ்லாக் ஸ்வீப் என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஓவருக்கு ஒரு பவுண்டரி என சர்ஃபராஸ் விரட்டிக்கொண்டே இருக்க, ரன்கள் வந்த வண்ணமே இருந்தன. ஜடேஜா 92 ரன்கள் இருந்த போது 16 ரன்களில் இருந்த சர்ஃபராஸ், அவர் 96 ரன்கள் அடிப்பதற்குள் 49 ரன்கள் விளாசினார். சர்பராஸ் கானின் ஆட்டத்தை சமாளிக்கவே முடியாத இங்கிலாந்து பவுலர்கள், பவுண்டரிகளை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் முழித்தனர்.

sarfaraz khan
sarfaraz khan

9 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிய சர்ஃபராஸ் அறிமுக போட்டியிலேயே 48 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே குறைவான பந்துகளில் அரைசதமடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தினார். ஆனால் ஒரு அசத்தலான சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சர்பராஸ் 62 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த மாதிரியான ஆட்டத்தை ஆட தைரியம் தேவை! - பால் காலிங்வுட்

சர்பராஸ் கானின் ஆட்டத்தை புகழ்ந்து பேசிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பால் காலிங்வுட், “சர்ஃபராஸ் கான் விளையாடிய விதம் பிரம்மிக்க வைத்தது, அறிமுகப் போட்டியில் அப்படி விளையாடுவதற்கு நிறைய தைரியம் தேவை. பென் ஸ்டோக்ஸ் அவருக்காக பீல்டிங்கை டைட்டாக செட் செய்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் தன்னுடைய தாக்குதலை வான்வழியாக எடுத்துச் செல்ல பயப்படவில்லை” என்று சர்பராஸ் கானை புகழ்ந்துள்ளார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com