sachin - kohli bcci
கிரிக்கெட்

சச்சினா? கோலியா? யார் சிறந்த வீரர்? விவாதத்தை தூண்டிய முன்னாள் வீரர் கருத்து!

கோலியின் சாதனைகள் சூடுபிடித்துள்ள நிலையில், சச்சினா கோலியா யார் தலைசிறந்தவர் என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.

Rishan Vengai

கோலியா? சச்சினா? என்ற ஒப்பீடுகள் புதியவை அல்ல, இருப்பினும் ஒரு தசாப்த காலமாக வேறு யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையான, டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற உலக சாதனையை கோலி நெருங்கி வருவதால், சமீபகாலமாக இந்த ஒப்பீடுகள் மேலும் சூடுபிடித்து வருகின்றன. இந்தசூழலில் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 88 பந்துகளில் 10 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 139 ரன்களை விளாசியிருந்தார் விராட் கோலி. 55வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த அவர் சச்சினின் பல சாதனைகளை முறியடித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15000 ரன்களை கடந்த கோலி, லிஸ்ட் ஏ ODI கிரிக்கெட்டில் 60 சதங்கள் அடித்து முதலிடத்திலிருந்த சச்சினை சமன்செய்தார். இதில் கோலிக்கும், சச்சினுக்கும் இடையேயான போட்டி வித்தியாசங்கள் 200ஆக இருப்பது ஒயிட்பால் கிரிக்கெட்டில் கோலியின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இந்திய மண்ணில் 7000 ODI ரன்கள் அடித்த முதல் வீரராகவும் மாறி சாதனை படைத்தார்.

virat kohli

இத்தகைய சாதனைகளுக்கு பின்னால் தலைசிறந்த வீரர் யார்? சச்சினா? டெண்டுல்கரா? என்ற கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றை தலைகீழாக திருப்பிப்போட்ட சச்சின் 100 சதங்கள் அடித்து யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கும் சூழலில், கோலியால் அந்த சாதனையை முறியடிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தசூழலில் கோலியா? சச்சினா? யார் தலைசிறந்தவர் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “முதலில் இரண்டு தலைமுறை வீரர்களை ஒப்பிடுவதே தவறானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் துணிந்து இதைச் சொல்வேன், இரண்டு காரணங்களுக்காக சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியை விட முன்னிலையில் இருக்கிறார். முதலாவதாக, நான் சச்சினின் தீவிர ரசிகன். அவர் விளையாடிய விதம், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் சூழல் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையாக அவரே இருந்தார்.

மற்றொன்று டெண்டுல்கர் பகல் நேரங்களில் அதிகளவு 50 ஓவர் கிரிக்கெட்டை விளையாடியுள்ளார். அப்போதெல்லாம் விதிமுறைகள் வேறாக இருந்தன, அப்போது பந்து பழசாகும் போது ரிவர்ஸ் ஸ்விங் ஆகும், அதற்கு எதிராக ரன் எடுப்பது என்பது கடினமான ஒன்று. தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 34 ஓவர்களுக்கு பிறகு தான் புதிய பந்தை எடுத்தார்கள். தற்போதைய பந்து பழசானாலும் அப்படியே தான் இருக்கும், அதில் ரன்களை அடிப்பது எளிது. இது விராட் கோலியின் தவறு இல்லை. கோலி எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியாவுக்காக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்திருந்தால், அவர் ஒரு சாம்பியன் வீரராகவே இருந்திருப்பார்; அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று பேசியுள்ளார்.

கோலியை விட சச்சினே சிறந்தவர் என கூறியதற்கு பிறகு, 100 சதங்களை கோலி எட்டுவாரா? என்ற கேள்விக்கும் அஸ்வின் பதில் அளித்தார். அப்போது, "விராட் கோலி 100 சதங்களைச் சாதித்தால், மகத்துவத்தின் அடிப்படையில் சச்சினும் விராட் கோலியும் சமநிலையில் இருப்பார்கள் என்பது தர்க்கரீதியில் உண்மையாகிவிடும்" என்று புகழ்ந்து பேசினார்.

2027 உலகக்கோப்பையோடு விடைபெறுவேன் என்று விராட் கோலி கூறியிருக்கும் நிலையில், சச்சினின் 100 சதங்களை கோலி எட்டுவாரா? சச்சினுக்கு நிகரான சிம்மாசனத்தில் அமர்வாரா? என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.