richard gleeson, conway
richard gleeson, conway pt web
கிரிக்கெட்

விலகினார் கான்வே... இந்திய அணியை அதிரவைத்த வீரரை தூக்கிய சிஎஸ்கே.. யார் இந்த ரிச்சர்ட்டு க்ளீசன்?

Angeshwar G

சென்னை அணியின் பெரும்பலம் எப்போதும் சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்களைப் பெற்றிருப்பது. மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய், டுவைன் ஸ்மித், மெக்கலம், வாட்சன், டுப்ளசிஸ் என அதிரடிக்கும் க்ளாசிக் ஆட்டத்திற்கும் பெயர்போனவர்களாகத்தான் இருப்பார்கள்.

அசத்திய கான்வே

டுப்ளசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமனம் ஆன பின், சென்னை அணிக்கான தொடக்க ஆட்டக்காரரைத் தேடும் படலம் தொடங்கியது. இறுதியில் கண்டெடுக்கப்பட்டவர் நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டெவான் கான்வே. தொடர்ந்து 2022, 2023 என இரு சீசன்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மொத்தமாக 23 இன்னிங்ஸ்களில் 924 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 48 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 141 ஆகவும் உள்ளது.

காயத்தால் விலகல்

இத்தகைய சூழலில், ஆஸ்திரேலியா உடன் (பிப்ரவரி 23) நடந்த இரண்டாவது டி20 போட்டியின்போது அவரது இடதுகை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. டி20 தொடருக்குப் பின் நடந்த டெஸ்ட் தொடரிலும் கான்வே விளையாடவில்லை. மருத்துவர்கள் பரிசோதனையில் கான்வேவிற்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து முழு உடற்தகுதியையும் எட்ட சில காலம் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போதைய ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இதனை அடுத்து விக்கெட் கீப்பரான தோனிக்கு பேக்கப் ஆக, ஆரவல்லி அவினாஷ் எனும் 18 வயது இளம்வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் தற்போது தொடரில் இருந்தே விலகியுள்ளார் கான்வே. அவருக்குப் பதிலாக சென்னை அணி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்டு க்ளீசனை சேர்த்துள்ளது. க்ளீசன் வலதுகை வேகப்பந்து வீச்சாளர். 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்களை க்ளீசன் வீழ்த்தி இருந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

ரிச்சர்டு க்ளீசன்

வங்கதேச வீரரான முஸ்தபிசுர் கடைசி சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவானால் அவருக்கு மாற்றாக க்ளீசன் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஸ்தபிசுர் ரஹ்மான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொள்ள வங்கதேசம் செல்கிறார். அவர் மே 1 ஆம் தேதி பஞ்சாப் உடன் நடக்கும் போட்டி வரை மட்டுமே சென்னை அணிக்காக விளையாடுவார்.

க்ளீசன் 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி இந்தியா உடன் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் தனது 34 வயதில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே ரோஹித் சர்மா, பந்த், விராட் கோலி என மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அந்த போட்டியில் அவர் வீசிய 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.