ganguly - yuvraj ai
கிரிக்கெட்

Head Coach கங்குலி.. Batting Coach யுவி.. மாஸ்டர் பிளான் போட்ட டெல்லி! முதல் கோப்பையை தூக்குமா DC?

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி, முதல் கோப்பையை டார்கெட் செய்து 2027 ஐபிஎல் சீசனில் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் இருவரையும் பயிற்சியாளராக களமிறக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே முறை மட்டுமே ஃபைனல் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ், 2027ல் முதல் கோப்பையை நோக்கி பெரிய மாற்றம் செய்கிறது. ஜேஎஸ்டபிள்யூ குழுமம் புதிய பயிற்சியாளர் அணியை அமைத்து, இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட் சௌரவ் கங்குலியை ஹெட் கோச்சாகவும், யுவராஜ் சிங்கை பேட்டிங் கோச்சாகவும் கொண்டு வர உள்ளது. இந்த கூட்டணி டெல்லியின் அதிர்ஷ்டத்தை மாற்றுமா என ஐபிஎல் உலகம் கவனித்து வருகிறது.

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது, உலகளவில் அதிகளவில் பணம் புழங்கும் கிரிக்கெட் லீக்காக மிகப்பெரிய ஹிட்டடித்தது. உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த வீரர்கள் கொண்ட 10 அணிகள், போட்டியை விறுவிறுப்பாக்கும் விதிமுறைகள், குறுகிய வடிவ போட்டிகள் என ரசிகர்களை ஒவ்வொரு நொடியும் சீட் நுனியில் அமரவைக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டானது உலகத்தின் 4வது பணக்கார லீக்காக இருந்துவருகிறது.

2026 ஐபிஎல் அப்டேட்

ஐபிஎல் தொடரில் விளையாடுவதே பல சர்வதேச விளையாட்டு வீரர்களின் கனவாக இருந்துவரும் சூழலில், ஐபிஎல் கோப்பை வெல்வது என்பது ஒரு அணிக்கு எவ்வளவு பெரிய கனவாக இருக்கும். தலைசிறந்த 10 அணிகளில் ஒரு அணி சாம்பியன் என்பது கிரீடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில்தான் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிவரும் 10 அணிகளில் டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலிய 3 அணிகள் மட்டுமே ஒரு கோப்பை கூட வெல்லாமல் இன்றுவரை இருந்துவருகின்றன.

Sourav Ganguly & Virat Kohli

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனிலிருந்து விளையாடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணி, இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 2020 ஐபிஎல் இறுதிப்போட்டிவரை முன்னேறிய டெல்லி அணி, இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது. அதற்குபிறகு பல்வேறு பயிற்சியாளர்கள், கேப்டன்கள் தலைமையில் விளையாடினாலும் டெல்லி அணியால் ஃபைனலுக்கு தகுதிபெறவே முடியவில்லை.

இந்நிலையில் 2027 ஐபிஎல் சீசனில் முதல் கோப்பையை தூக்கவேண்டுமென இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் இருவரையும் பயிற்சியாளர்களாக நியமிக்க டெல்லி கேபிடல்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உரிமையாளர்களின் சுழற்சி அடிப்படையில் ஜி.எம்.ஆர் குழுமத்திடமிருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு கட்டுப்பாட்டில் எடுக்கும் ஜே.எஸ்.டபிள்யூ குழுமம், தங்களுடைய விருப்பப்படி புதிய பயிற்சியாளர்களை நியமிக்க உள்ளது. அதனடிப்படையில் 2026 ஐபிஎல்லில் பயிற்சியாளர்களாக இருந்த ஹேமங் பதானி உள்ளிட்டோர் வேலையை இழக்க உள்ளனர்.

தகவலின் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலியும், பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கும் நியமிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 90களின் இந்திய அணியில் யுவராஜ் சிங், தோனி, சேவாக், ஜஹீர் கான், ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற ஸ்டார் வீரர்களை உருவாக்க காரணமாக இருந்த சவுரவ் கங்குலியும், தற்போதைய இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் போன்ற வீரர்களுக்கு பயிற்சியளித்திருக்கும் யுவராஜ் சிங்கும் இணைவது டெல்லி அணிக்கு அசுரபலமாக மாறும்.

yuvraj singh - abhishek sharma

இந்தஜோடி அடுத்த 2 வருடங்களில் டெல்லி அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தரும் வேட்கையோடு களமிறங்க உள்ளது. வெளியாகியிருக்கும் இந்த தகவலை வரவேற்றிருக்கும் இந்திய ரசிகர்கள், இந்த காம்போ எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.