சமீபத்திய பார்டர் கவாஸ்கர் தொடரில் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. பேட்ஸ்மேனாக 5 இன்னிங்ஸில் 31 ரன்களை மட்டுமே ரோகித் எடுத்துள்ளார். பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் கூட 38 ரன்களை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டனாகவும் அவரது செயல்பாடுகள் மோசமாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சம்மந்தமே இல்லாத பிளேயிங் 11, எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலர் என்பதில் சரியாக முடிவெடுக்காதது, 11வது வீரருக்கு கூட பவுண்டரி லைனில் ஃபீல்டரை நிறுத்துவது என எடுக்கும் அத்தனை முடிவுகளையும் படுமோசமானதாக ரோகித் சர்மா எடுப்பதாக தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ரோகித் தலைமையில் இந்திய அணி விளையாடிய கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது.
இந்நிலையில்தான், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவடைந்தபின் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பாக, பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்களிடையே உரையாடல்கள் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், ரோகித் தனது ஓய்வு தொடர்பாக முடிவு செய்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கு எப்போது தனது முடிவினை அறிவிப்பார் என்ற தகவல்கள் இல்லையென்றாலும், சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பின் ரோகித் தனது ஓய்வு குறித்து இன்னும் தெளிவான முடிவினை எட்டலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும்பட்சத்தில், ரோகித் சர்மா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை கேப்டனாக செயல்படுவது குறித்து தேர்வாளர்களுடனும் பிசிசிஐ உடனும் ஆலோசிக்கலாம். ஆனால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுமா என்பதே சந்தேகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதிப்போட்டிதான் ரோகித் டெஸ்ட் வாழ்வைத் தீர்மானிக்கும் காரணியாக செயல்படும்.
இந்திய அணி சிட்னியில் நடக்கும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று, இலங்கை உடனான 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோற்கும் பட்சத்தில்தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். தகுதி பெற முடியவில்லை என்றால், சிட்னி தொடருக்குப் பின் ரோகித் தனது ஓய்வினை அறிவிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய ரசிகர்கள் முன்னிருக்கும் கேள்வி, ரோகித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுவாரா என்பதைத்தாண்டி, அணியில் ஒரு வீரராகவாவது தொடர்வாரா என்பதுதான். அவருக்கு ரன்கள் எடுப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், இந்த கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாது.