2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் முதலிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், கடைசி 1 இடத்திற்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் முதலிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. ஆனால் மும்பையை கடைசி போட்டியில் பந்தாடிய ராஜஸ்தான் அணி 4வது அணியாக பிளேஆஃப்க்கு தகுதிபெற்றது.
இந்தசூழலில் இறுதிப்போட்டிக்கு யார் செல்லப்போகிறார்கள் என்ற குவாலிஃபையர் 1 போட்டி ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருக்கிறது. தரம்சலாவில் இன்று இரவு 7 மணிக்கு இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தரம்சாலா ஆடுகளத்தை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமான, அதிக சிக்சர்கள் அடிக்கக்கூடிய ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இங்கு சராசரி ஸ்கோர் 190ஆக இருக்கிறது. ஆனால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு பவர்பிளே ஓவரில் சற்று கடினமானதாக இருக்கும் என்றும், இங்கு இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக இருந்திருக்கிறது. மழை பெய்ய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.
இந்த சீசனில் இங்கு நடைபெற்ற பகல்நேர ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றிபெற்றது. ஆனால் 2 போட்டிகளில் சேஸிங்கின் போது குஜராத் மற்றும் மும்பை அணிகள் எளிதாக வெற்றிபெற்றன.
இன்றைய போட்டியில் புவனேஷ்குமாருக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் முக்கிய வீரர்களான கில், ஜோஸ் பட்லர் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த 2 வீரர்களையும் புவனேஷ்வர் அதிகமுறை வெளியேற்றி இருக்கிறார். அவர் பட்லரை ஒன்பது முறையும், கில்லை ஐந்து முறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். கடந்த மோதலில் குஜராத்தின் பெரிய மூன்று வீரர்களான கில், சாய் சுதர்சன், பட்லர் 2 பேரையும் அவர் ஆட்டமிழக்கச் செய்தார். இந்த மோதல் சிறந்ததாக இருக்கப்போகிறது.
டைட்டன்ஸ் அணி ஆர்சிபியின் முக்கிய வீரரான ரஜத் பட்டிதாரை புதிய யுக்தியுடன் விரைவாகவே வெளியேற்றி மற்ற அணிகளுக்கும் அதே பாதையை சொல்லிக்கொடுத்தது. அகமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூர்மையான அதேநேரத்தில் வேகம்குறைந்த ஷார்ட் பந்துகளால் ரஜத் பட்டிதாரை சோதித்தனர். அதன்பிறகு மற்ற அணிகள் ஆர்சிபி கேப்டனுக்கு எதிராக இந்த உத்தியை வழக்கமாகப் பயன்படுத்தி வருகின்றன.
* குவாலிஃபையர் 1-ல் வெற்றிபெறுபவர்கள், கடந்த எட்டு சீசன்கள் உட்பட, 12 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளனர்.
* ஐபிஎல்-ல் 17 பிளேஆஃப் போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி மோசமாக ரெக்கார்டே வைத்துள்ளார். அவர் இரண்டு அரை சதங்கள் உட்பட, வெறும் 26.40 சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். மேலும், அவரது ஸ்டிரைக் ரேட் 121 மட்டுமே இருக்கிறது.
* ஆனால் வெங்கேஷ் ஐயர் தனது கடைசி நான்கு பிளேஆஃப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் 50+ ரன்கள் அடித்துள்ளார். அவர் கொல்கத்தா கோப்பையை வெல்ல பிளேஆஃப் போட்டிகளில் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
* 2023 முதல், ஐபிஎல் தொடரில் ஜிடி மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளே மிகவும் வெற்றிகரமான அணிகளாகத் திகழ்கின்றன. இவ்விரு அணிகளும் தலா 34 வெற்றிகள் மற்றும் 24 தோல்விகள் என்ற ஒரே மாதிரியான சாதனையைப் படைத்துள்ளன.