sarfaraz khan - ravindra jadeja
sarfaraz khan - ravindra jadeja X
கிரிக்கெட்

"சர்பராஸ் கானுக்காக வருந்துகிறேன்.. அது முழுவதும் என்னுடைய தவறு!" - வருத்தம் தெரிவித்த ஜடேஜா!

Rishan Vengai

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் 33 ரன்களுக்கே 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில், ரஜத் பட்டிதார் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற அணியை மீட்டுக்கொண்டுவர வேண்டிய பொறுப்பு ரோகித் சர்மாவின் தோள்களில் சேர்ந்தது.

ஜடேஜாவுடன் சேர்ந்து 200 ரன்கள் பாட்ர்னர்ஷிப் போட்ட ரோகித் சர்மா, ஒரு கேப்டன் இன்னிங்ஸ் ஆடி 131 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் வெளியேறிய பிறகு தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கிய சர்பராஸ் கான், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

sarfaraz khan

ஸ்வீப், லேட் கட், ஸ்டிரைட் ஹிட், ஸ்லாக் ஸ்வீப் என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஓவருக்கு ஒரு பவுண்டரி என சர்பராஸ் விரட்டிக்கொண்டே இருக்க, ரன்கள் வந்த வண்ணமே இருந்தன. ஜடேஜா 92 ரன்கள் இருந்த போது 16 ரன்களில் இருந்த சர்ஃபராஸ், அவர் 96 ரன்கள் அடிப்பதற்குள் 49 ரன்கள் விளாசினார். சர்பராஸ் கானின் ஆட்டத்தை சமாளிக்கவே முடியாத இங்கிலாந்து பவுலர்கள், பவுண்டரிகளை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் முழித்தனர்.

sarfaraz khan

9 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிய சர்பராஸ் அறிமுக போட்டியிலேயே 48 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே குறைவான பந்துகளில் அரைசதமடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ரன் அவுட்டாக்கிய ஜடேஜா! ஏமாற்றுத்துடன் வெளியேறிய சர்பராஸ்!

82வது ஓவரின் 5வது பந்தில் 99 ரன்களுடன் இருந்த ரவிந்திர ஜடேஜா, சதமடிக்கும் வாய்ப்புக்காக ஃபீல்டரிடமே பந்தை அடித்துவிட்டு சர்பராஸ் கானை சிங்கிளுக்கு அழைத்தார். ஸ்டிரைக்கில் இருக்கும் ஜடேஜாவே ரன்னுக்கு அழைக்க நான்-ஸ்டிரைக்கில் இருந்த சர்பராஸ் கான் முழு ரன்னுக்கும் கமிட்டானார். ஆனால் ஜடேஜா ரன்னிலிருந்து பின்வாங்க, சர்ஃபராஸ் கான் திரும்பி செல்வதற்குள் ஸ்டம்பை தகர்த்தார் மார்க் வுட்.

சதமடிக்கும் வகையிலான ஒரு அற்புதமான ஆட்டத்தை விளையாடிய சர்பராஸ் கான், 62 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சோகமுகமாக வெளியேறினார். இந்த நிகழ்வை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜாவின் செயலுக்கு கோவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

வருத்தம் தெரிவித்த ஜடேஜா!

முதல்நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், தன்னுடைய தவறான அழைப்பால் சர்பராஸ் கான் அவுட்டானதற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் ஜடேஜா.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் அவர், “சர்பராஸ் கானுக்காக வருந்துகிறேன், அது முழுவதும் என்னுடைய தவறான அழைப்பு. சிறப்பாக விளையாடினார்!” என்று பதிவிட்டுள்ளார். சர்பராஸ் கானை ரன் அவுட்டாக்கியதற்காக ஜடேஜாவை ட்ரோல் செய்த ரசிகர்கள், தற்போது ஜடேஜாவின் பதிவிற்காக பாராட்டிவருகின்றனர்.