4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்! ஒரே ஓவரில் மாறியப் போட்டி; ரஞ்சிக் கோப்பையில் சாதனை படைத்த KKR வீரர்!

ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் மத்திய பிரதேச வீரர் குல்வந்த் கெஜ்ரோலியா.
குல்வந்த் கெஜ்ரோலியா
குல்வந்த் கெஜ்ரோலியாX

2023-2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் ஆறாவது சுற்றுப்போட்டிகள் நடந்து வருகின்றன. உள்நாட்டின் சிறந்த கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல, 38 அணிகள் போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேச மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்தூரில் நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் ஒரேபிரிவில் முதலிரண்டு அணிகளுக்கு இடையான ஆட்டம் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த மத்தியபிரதேச அணி ஹிமான்சு மந்திரியின் அபாரமான சதத்தால் 454 ரன்களை குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய பரோடா அணி 132 ரன்களை மட்டுமே எடுத்து, ஃபாலோவான் படி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ச்சியாக விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மத்திய பிரதேச வேகப்பந்துவீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பரோடா 270 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்துவீசிய கெஜ்ரோலியா 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்! ரஞ்சிக்கோப்பையில் 3வது வீரர்!

சதமடித்து 102 ரன்களுடன் களத்திலிருந்த சஷ்வத் ராவத்தை 95வது ஓவரின் 2வது பந்தில் வெளியேற்றிய கெஜ்ரோலியா, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் மகேஷ் பித்தியா, பார்கவ் பட் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோரை வெளியேற்றி அசத்தினார். 255/5 என்ற நிலையில் இருந்த பரோடா அணி ஒரு நொடியில் 255/9 என மாறியது. பின்னர் அடுத்த ஒவரை வீச வந்த கெஜ்ரோலியா கடைசி விக்கெட்டையும் வீழ்த்த 10 விக்கெட்டுகளை இழந்து 270க்கு ஆல் அவுட்டானது பரோடா அணி.

ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளராக மாறிய குல்வந்த் கெஜ்ரோலியா, டெல்லியின் ஷங்கர் சைனி மற்றும் ஜம்மு காஷ்மீரின் முகமது முதாசிர் ஆகியோருடன் ஒரு பிரத்யேக சாதனைப்பட்டியலில் இணைந்தார்.

குல்வந்த் கெஜ்ரோலியா
குல்வந்த் கெஜ்ரோலியா

இவர் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் ஒரு பகுதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார் கெஜ்ரோலியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com