வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெர்னார்ட் ஜூலியன் 75 வயதில் மரணம் web
கிரிக்கெட்

வெறும் 12 சர்வதேச போட்டிகள்.. உலகக்கோப்பை வென்று சரித்திரம் படைத்த WI வீரர் மரணம்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், 1975 உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணியாக இருந்த பெர்னார்ட் ஜூலியன் காலமானார்.

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், 1975 உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணியாக இருந்த பெர்னார்ட் ஜூலியன் காலமானார்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது வெஸ்ட் இண்டீஸ் அணி தலைசிறந்த அணியாகவும், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் மிரட்டும் ஒரு அணியாகவும் மாறும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்..

ஆனால் 1969 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் 28 சராசரியுடன் 15 முறை 5 விக்கெட்டுகள், 1 முறை 10 விக்கெட் உடன் 483 விக்கெட்டுகளை வீழ்த்தி தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த பெர்னார்ட் ஜூலியன், வெஸ்ட் இண்டீஸை தலைசிறந்த அணியாக மாற்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

பெர்னார்ட் ஜூலியன் மரணம்

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான பெர்னார்ட் ஜூலியன் பௌலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் வித்தைக்காரராகவே திகழ்ந்தார். முதல்தர போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகளை சேர்த்து 4 சதங்களுடன் 30 அரைசதங்களை விளாசி சுமார் 7000 ரன்களை குவித்திருந்தார்.

போட்டியையே தலைகீழாக மாற்றும் ஆல்ரவுண்ட் திறமையான பெர்னார்ட் ஜூலியன் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருந்தார், அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாயிட். அந்த நம்பிக்கையை சரியாக காப்பாற்றிய ஜூலியன் 1975 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் கோப்பையை உயர்த்த முக்கிய காரணமாக இருந்தார்.

உலகக்கோப்பை நாயகன் மரணம்..

1973 முதல் 1977 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே விளையாடிய பெர்னார்ட் ஜூலியன், 24 டெஸ்ட் போட்டிகளிலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே விளையாடினார். தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகப்பெரியது. அதிலும் தான் விளையாடிய ஒரே உலகக்கோப்பையில் அனைத்து உலகநாடுகளையும் கதிகலங்க வைத்தார் ஜூலியன்.

பெர்னார்ட் ஜூலியன் மரணம்

1975-ல் நடைபெற்ற முதல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய அவர், 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதுமட்டுமில்லாமல் மிக முக்கியமான நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும், தனது பந்துவீச்சில் மிரட்டிய ஜூலியன், 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

பெர்னார்ட் ஜூலியன் மரணம்

இறுதிப்போட்டியிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் அடித்து அசத்தினார், ஜூலியன். 1975 உலகக்கோப்பை தொடரில் 17 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜூலியன், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது பந்துவீச்சாளராக இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியை வரலாற்றில் தடம்பதிக்க வைத்து கிரிக்கெட் வரலாற்றில் அழியாத பெயரை சம்பாதித்த ஜூலியன், தென்னாப்பிரிக்காவின் இனவெறி சர்ச்சை விவகாரத்துடன் தன்னுடைய சர்வதேச வாழ்க்கையை குறுகிய காலத்துடன் முடித்துக்கொண்டார்.

இரங்கல் தெரிவித்த வெஸ்ட்இண்டீஸ் போர்டு..

குறைந்த போட்டிகளில் விளையாடியிருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தன்னுடைய பெயரை வரலாற்றில் தடம்பதித்த பெர்னார்ட் ஜூலியன் தன்னுடைய 75-வது வயதில் மரணமடைந்துள்ளார். அவருடைய மரணத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு இரங்கல் தெரிவித்துள்ளது.

அவருடைய கேப்டனான கிளைவ் லாயிட், “ஜூலியன் எப்போதுமே 100 சதவீதத்திற்கும் மேலான உழைப்பைக் கொடுப்பார். தனது கடமைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நான் அவரை முழுமையாக நம்பியிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் தனது முழு திறனை அணிக்காகக் கொடுத்தார். என்ன ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.