ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம்.. சஞ்சு சாம்சனை வஞ்சிக்கும் அஜித் அகர்கர்?
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்தியாவின் ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சனை அணியிலிருந்து வெளியேற்ற ஒவ்வொரு காரணம் சொல்லப்படுகிறது.
அக்டோபர் 19-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இதற்கான இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. அதற்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சொன்ன பதில்தான் பல்வேறு ரசிகர்களை அதிருப்தி அடையச்செய்துள்ளது.
சஞ்சு சாம்சனை வஞ்சிக்கும் அகர்கர்..?
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் இடம்பெற்றுள்ளனர். துருவ் ஜூரெலின் சமீபத்திய ஃபார்மை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலில் சஞ்சு சாம்சனுக்கு டி20யில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது டி20 போட்டியில் இடம்கிடைத்தாலும் ஆசியக்கோப்பை தொடரில் அவர் நம்பர் 5 வீரராக களமிறக்கப்பட்டு விளையாடப்படுகிறது. அதிலும் ஒரு போட்டியில் நம்பர் 8 வரை பேட்டிங்கே வரவில்லை.. அப்போது சுப்மன் கில் அணியில் இருப்பதால், சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடுவதுதான் சரி என அஜித் அகர்கர் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு இடம்பெறாதது குறித்து பேசியிருக்கும் அகர்கர், சஞ்சு சாம்சன் ஒரு டாப் ஆர்டர் வீரர், எங்களுக்கு ஒரு மிடில் ஆர்டர் விக்கெட் கீப்பர் தேவைப்பட்டதால் துருவ் ஜூரெலை கொண்டுவந்தோம் என தெரிவித்துள்ளார். இது சஞ்சு சாம்சனை வெளியேற்ற வேண்டுமென்றே காரணம் சொல்லப்படுவதாக இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு நிகழ்வது மிகவும் நியாயமற்றது. தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் அணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரை வெளியில் அமரவைக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு நாள் நீங்கள் அவரை 5வது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கிறீர்கள், பின்னர் மற்றொரு நாள் நீங்கள் அவரை ஓப்பனராக மாற்றுகிறீர்கள். சில நாட்களுக்கு பிறகு அவரை 7 அல்லது 8 வது இடத்தில் அனுப்புகிறீர்கள். துருவ் ஜூரெல் திடீரென்று எப்படி உள்ளே வந்தார்? சஞ்சு ஆடும் லெவனில் இடம்பெறலாம் இல்லாமல் போகலாம், ஆனால் அவருக்கு முதல் உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று காட்டமாக பேசியுள்ளார்.