SA20 லீக்கில் 2026 சீசன் விறுவிறுப்பாக தொடங்கியது. MI கேப்டவுனை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பார்ல் ராயல்ஸ், 19 வயது லுவான்-ட்ரே பிரிட்டோரியஸின் 98 ரன்கள் ஆட்டத்தால் கவனத்தை ஈர்த்தது.
கிரிக்கெட் உலகில் அனைத்து டி20 லீக்கிற்கும் முன்னோடியான ஐபிஎல்லை பார்த்து தொடங்கப்பட்டது தான் தென்னாப்பிரிக்கா டி20 லீக். சொல்லப்போனால் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் உள்ள அனைத்து ஆறு அணிகளும் இந்தியன் பிரீமியர் லீக்கின் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. ரிலையன்ஸ், RPSG குழுமம் மற்றும் சன் குழுமம் போன்ற இந்திய வணிக நிறுவனங்கள் தான் SA20 தொடர் அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர்.
2023, 2024, 2025 என 3 சீசன்களை கண்டுள்ள SA20 லீக்கானது அதன் நான்காவது சீசனை எட்டி விளையாடப்பட்டு வருகிறது. முதலிரண்டு சீசன்களின் டைட்டில் வின்னராக சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஜொலித்த நிலையில், 2025 சாம்பியனாக எம்ஐ கேப் டவுன் மாறி அசத்தியது.
இந்தசூழலில் 2026 தென்னாப்பிரிக்கா டி20 லீக்கானது விறுவிறுப்பான த்ரில்லர் போட்டிகளால் கவனத்தை ஈர்த்து வருகிறது.
2026 தென்னாப்பிரிக்கா லீக்கின் தொடக்க போட்டியே ஒரு அதிக ரன்கள் கொண்ட விறுவிறுப்பான போட்டியாகவே இருந்தது. மார்க்ரம் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் 232 ரன்களை குவிக்க, ரஷித் கான் தலைமையிலான MI கேப்டவுன் 217 ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடியது. 63 பந்தில் 113 ரன்கள் அடித்த ரியான் ரிக்கல்டன் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் இரண்டு அணிகளும் 205 ரன்கள் அடித்து போட்டி சமனாக, SA20 லீக்கில் முதல்முறையாக சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றது. அதிலும் 1 பந்துக்கு 1 ரன் தேவையாக இருந்தபோது ரன் அவுட் மூலம் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்ற விறுவிறுப்பான த்ரில்லராக அமைந்தது.
இந்தசூழலில் தான் நேற்று நடைபெற்ற போட்டியில் MI கேப்டவுனை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் த்ரில் வெற்றியை பதிவுசெய்தது. கடைசி 1 பந்துக்கு 6 ரன்கள் தேவையென விறுவிறுப்பு தொற்றிக்கொள்ள, எம்ஐ அணியின் லிண்டேவால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. சிக்சருக்கு போய்விட்டது என நினைக்கும்போது, பந்து பவுண்டரி லைனுக்கு உள்ளேயே பிட்சாகி சென்று ஏமாற்றியது. இப்படி தொடர் த்ரில்லர் போட்டிகளால் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கானது அதிக கவனத்தை பெற்றுவருகிறது.
அதிலும் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 19 வயது லுவான்-ட்ரே பிரிட்டோரியஸின் 65 பந்தில் 98 ரன்கள் என்ற வெறித்தனமான ஆட்டம் பாராட்டை பெற்றுவருகிறது. அதில் அவர் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களை பறக்கவிட்டார்..