pakistan vs australia preview
pakistan vs australia preview file image
கிரிக்கெட்

நம்பிக்கையை மீட்டுவிட்டதா ஆஸி.? Pak-க்கு நம்பிக்கை கொடுக்கப்போவது யார்? மைதானம் யாருக்கும் சாதகம்?

Viyan

போட்டி 18: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்

மைதானம்: எம் சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களூரு

போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 20, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

ஆஸ்திரேலியா

போட்டிகள்:3, வெற்றி - 1, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2

புள்ளிப் பட்டியலில் இடம்: ஆறாவது

சிறந்த பேட்ஸ்மேன்: மார்னஸ் லாபுஷான் - 175 ரன்கள்

சிறந்த பௌலர்: மிட்செல் ஸ்டார்க் - 5 விக்கெட்டுகள்

இந்த உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் மோசமாகத் தொடங்கியது. இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்து தோற்ற அணி, அடுத்த போட்டியில் சேஸ் செய்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றது. பேட்டிங், பௌலிங் எல்லாம் தடுமாறிய நிலையில் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று புள்ளிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது கம்மின்ஸின் அணி.

பாகிஸ்தான்

போட்டிகள்: 3, வெற்றிகள் - 2, தோல்வி - 1, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4

புள்ளிப் பட்டியலில் இடம்: நான்காவது

சிறந்த பேட்ஸ்மேன்: முகமது ரிஸ்வான் - 248 ரன்கள்

சிறந்த பௌலர்: ஹசன் அலி - 7 விக்கெட்டுகள்

நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளை வென்று நல்லபடியாகவே உலகக் கோப்பையைத் தொடங்கியது பாகிஸ்தான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக எட்டாவது முறையாக உலகக் கோப்பையில் தோற்ற அந்த அணி, அந்தப் போட்டியின் முடிவால் ரன் ரேட்டிலும் பெரும் அடி வாங்கியிருக்கிறது.

நம்பிக்கையை மீட்டுவிட்டதா ஆஸ்திரேலியா?

இரு தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக சூப்பர் கம்பேக் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு சுமார் 120 ரன்கள் கொடுத்திருந்தாலும், அதன்பிறகு இலங்கையை சுருட்டிய விதமும், கடைசி கட்டத்தில் சூறாவளியாக சுழன்று அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முடித்த விதமும் பழைய ஆஸ்திரேலியா திரும்பிவிட்டது என்பதை உணர்த்தியது. அந்த வெற்றி நிச்சயம் அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும்.

அதுமட்டுமல்லாமல் மிட்செல் மார்ஷ், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் என அந்த அணியின் சூப்பர் ஸ்டார்கள் நன்கு விளையாடியிருக்கிறார்கள். ஜாஷ் இங்லிஸ் கூட அவர்களின் பேட்டிங்குக்கு வலு சேர்த்தார். சொல்லப்போனால் ஸ்டீவ் ஸ்மித் தவிர எல்லோருமே நல்லதொரு பங்களிப்பைக் கொடுக்கின்றனர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான அவர் ஃபார்முக்கு வந்தால், ஆஸ்திரேலியா இன்னும் முழு வீச்சோடு செயல்படும்.

பாகிஸ்தானுக்கு நம்பிக்கை கொடுக்கப்போவது யார்?

பாகிஸ்தானின் நிலையோ அப்படியே ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற தோல்வி அந்த அணியின் நம்பிக்கையை நிச்சயம் சிதைத்திருக்கும். பெரிதும் நம்பப்பட்ட கேப்டன் பாபர் ஆசம் இந்தியாவில் தாக்கம் ஏற்படுத்தத் தவறுகிறார். அதனால் அந்த அணியின் பேட்டிங் முழுக்க முழுக்க முகமது ரிஸ்வானையே நம்பியிருக்கிறது.

அதுபோல் அவரின் புகழ்பெற்ற பௌலிங் யூனிட்டும் இன்னும் தங்கள் சிறப்பை வெளிக்காட்டவில்லை. ஷாஹின் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப் போன்றவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்திருந்த நிலையில், ஹசன் அலி தான் டாப் விக்கெட் டேக்கராக இருக்கிறார் என்பதே அவர்களின் தாக்கத்தைப் பற்றிச் சொல்லிவிடும். அவர்களின் ஸ்பின் அட்டாக்கும் இன்னும் ஜொலிக்கவில்லை. தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டுமெனில் அவர்களின் சீனியர் வீரர்கள் அனைவரும் எழுச்சி காணவேண்டும்.

மைதானம் எப்படி?

சின்னஸ்வாமி ஸ்டேடியம் பற்றி சொல்லவா வேண்டும், பௌண்டரிகள் பறக்கும், சிக்ஸர்கள் தெறிக்கும். சின்ன மைதானம் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே சாதகமாக இருந்திருக்கிறது இந்த மைதானம். பெரிய ஹிட்டர்கள் நிறைந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்ற இடமாக இம்மைதானம் இருக்கும். போக, ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர் அணிக்கு விளையாடும் கிளென் மேக்ஸ்வெல் இந்த மைதானத்தை நன்கு அறிந்தவர். இந்த உலகக் கோப்பையில் இங்கு நடக்கும் முதல் போட்டி இதுதான்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

ஆஸ்திரேலியா - கிளென் மேக்ஸ்வெல்: ஐபிஎல் அரங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக பட்டையைக் கிளப்பிய மேக்ஸ்வெல், மீண்டும் அந்தக் களத்துக்குத் திரும்புகிறார். கடந்த போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கி அசத்தியவர், இந்த சிறிய மைதானத்தில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார்.

பாகிஸ்தான் - பாபர் ஆசம்: ஒரு பெரும் தோல்விக்குப் பிறகு 5 முறை சாம்பியனை சந்திக்கும் அணிக்கு, தலைவன் முன் நின்று வழிநடத்துவது அவசியம். முதல் 3 போட்டிகளிலும் தடுமாறிய பாபர் ஆசம், இந்தப் போட்டியில் ஒரு கேப்டன் இன்னிங்ஸ் ஆடினால் தான் ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுக்க முடியும்.