INDvBAN | இலக்கை மட்டுமல்ல, சதத்தையும் சேஸ் செய்த விராட் கோலி... ஆனால்..?

இலக்கை மட்டுமல்ல, சதத்தையும் சேஸ் செய்தார் விராட் கோலி. இப்போது விமர்சனங்கள் சேஸ் செய்கின்றன!
Virat Kohli
Virat KohliKunal Patil
Published on
போட்டி 17: இந்தியா vs வங்கதேசம்
முடிவு: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (வங்கதேசம் - 256/8; இந்தியா - 261/3, 41.3 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்தியா)
பேட்டிங்: 97 பந்துகளில் 103 ரன்கள் (6 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்)

விராட் கோலி இந்தப் போட்டியின் போக்கை மாற்றிவிடவில்லை. வங்கதேசத்தின் வெற்றியைப் பறிக்கவில்லை. ஆனால் ஒரு அட்டகாசமான கொண்டாட்டத்தை புனே ரசிகர்களுக்கு வழங்கினார். ரோஹித் வெளியேறி விராட் களமிறங்கியபோது இந்திய அணி நல்ல நிலையில் இருந்தது. 12.4 ஓவர்களில் 88 ரன்கள் விளாசியிருந்தது. அப்படியொரு நிலையில் வந்தவருக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டமாக கொட்டியது. அவர் சந்தித்த முதல் பந்தையே ஹசன் மஹ்மூத் நோ பாலாக வீசினார். அந்தப் பந்தில் 2 ரன்கள் எடுத்த விராட் ஃப்ரீ ஹிட்டை சந்தித்தார். அந்தப் பந்தில் ஃபோர் அடிக்க, மீண்டும் நோ பால் என நடுவர் அறிவித்தார். இந்த முறை ஃப்ரீ ஹிட் சிக்ஸருக்குப் பறந்தது. இப்படி முதல் 3 பந்துகளில் 12 ரன்கள் விளாசி வழக்கத்துக்கு மாறாக தன் இன்னிங்ஸை தொடங்கினார் கோலி. ஆனால் மொத்த இன்னிங்ஸிலும் அந்த வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார்.

Virat Kohli
Virat KohliKunal Patil

தன் வழக்கமான பாணியில் ஸ்டிரைக் ரொடேட் செய்துகொண்டே இருந்தாலும் 100+ ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடினார் விராட். 48 பந்துகளில் அவரது அரைசதம் வந்தது. கடைசி 45 பந்துகளில் 3 ஃபோர்கள் மட்டுமே அடித்திருந்தார் அவர். நடுவே கொஞ்சம் வேகம் குறைந்தது. கோலி சதம் அடிப்பாரா என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. போதாக்குறைக்கு ராகுல் வேறு சில பௌண்டரிகள் பறக்கவிட்டார். ஆனால் 39வது ஓவரில் எல்லாம் மாறியது. அந்த ஓவரின் நான்காவது பந்து முடிந்திருந்தபோது கோலி 74 ரன்கள் அடித்திருந்தார். அவரது சதத்துக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கும் 26 ரன்கள் தான் தேவைப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸர் அடித்த அவர், கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை தக்கவைத்துக்கொண்டார்.

இந்திய வெற்றிக்கு - 19 ரன்கள்; கோலியின் சதத்துக்கு - 19 ரன்கள்

விராட் கோலி
விராட் கோலிKunal Patil

முதல் பந்தில் கோலி ஃபோர் அடிக்க, இரண்டாவது பந்து டாட் ஆனது. மீதமிருக்கும் 15 ரன்களையும் கோலி அடித்துவிடுவாரோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அடித்த அடுத்த ஷாட் எல்லைக்கோட்டில் இருந்த ஃபீல்டருக்குச் சென்றது. ஆனால் கோலியும், ராகுலும் ஓடவில்லை. அதனால், கோலி சதமடிப்பதில் அவர்கள் தீர்க்கமாக இருக்கிறார்கள் என்று புரிந்தது. அடுத்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பியவர், கடைசி பந்தில் மீண்டும் சிங்கிள் எடுத்தார்.

இந்திய வெற்றிக்கு - 8 ரன்கள்; கோலியின் சதத்துக்கு - 8 ரன்கள்

விராட் கோலி
விராட் கோலிArun Sharma

இந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஹசன் மஹமூத் வைடாக வீச இன்னும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இந்திய வெற்றிக்கு - 7 ரன்கள்; கோலியின் சதத்துக்கு - 8 ரன்கள்

விராட் கோலி
விராட் கோலிArun Sharma

அதன்பிறகு யுக்தியை மாற்றிய விராட், அந்த ஓவரில் பௌண்டரிகளை டார்கெட் செய்யாமல் இரண்டு இரண்டு ரன்களாக ஓடினார். கடைசிப் பந்தில் மீண்டும் சிங்கிள்.

இந்திய வெற்றிக்கு - 2 ரன்கள்; கோலியின் சதத்துக்கு - 3 ரன்கள்

விராட் கோலி
விராட் கோலிKunal Patil

இதுவரை நடந்த விஷயத்துகே பலரும் கோலியை விமர்சனம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். ஒரு உலகக் கோப்பை போட்டியில் தனிப்பட்ட சாதனைக்காக ஆடுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்தியாவின் ரன்ரேட் பாதிக்கப்படுகிறது என்று சிலர் புலம்பினார்கள். ஆனால் அடுத்த பந்து இன்னும் பெரிய விமர்சனத்தைக் கிளப்பியது.

நசும் அஹமது வீசிய பந்து லெக் சைட் வெளியே செல்ல, எல்லோரும் அது வைட் என்று நினைத்தனர். ஆனால் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ அதற்கு வைட் கொடுக்கவில்லை. ஒரு வீரரின் சாதனைக்காக நடுவரே விதிகளை மறக்கிறார் என பலரும் இதை விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

சரி, களத்துக்குச் செல்வோம். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்து தன் சதத்தையும், ஆட்டத்தையும் நிறைவு செய்தார் விராட். இது ஒருநாள் அரங்கில் அவரது 48வது சதம். இந்த சாதனையோடு மட்டுமல்லாமல், இந்தப் போட்டியின்போது சர்வதேச அரங்கில் 26,000 ரன்களையும் கடந்தார் கிங் கோலி.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"ஆட்ட நாயகன் விருதை ஜடேஜாவிடம் இருந்து பறித்துக்கொண்டதற்கு மன்னிக்கவும். இந்திய அணிக்கு ஒரு மிகப் பெரிய பங்களிப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். உலகக் கோப்பையில் தொடர்ந்து நிறைய அரைசதங்கள் அடித்துவிட்டேன். அதனால் இம்முறை சதத்தை நிறைவு செய்திடவேண்டும் என்று நினைத்தேன். களத்தில் இறங்கியதுமே இரண்டு ஃப்ரீ ஹிட்கள் கிடைத்தது கனவு தொடக்கமாக அமைந்தது. 'இந்த சூழ்நிலையில் இருப்பது கனவாக இருந்தால், அப்படியே தொடர்ந்து தூங்கச் சென்றுவிடுவோம்' என்று சுப்மன் கில்லிடம் கூறிக்கொண்டிருந்தேன். அது என்னை மிகவும் நிதானமாக்கியது. இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. நான் என்னுடைய ஆட்டத்தை ஆடுவதற்கு அனுமதித்தது. முடிந்த போதெல்லாம் இடைவெளிகளைப் பயன்படுத்தி பௌண்டரிகள் அடித்துக்கொண்டே இருந்தேன். இந்த டிரஸ்ஸிங் ரூம் மிகவும் அற்புதமான சூழ்நிலையாக இருக்கிறது. வெற்றிபெறவேண்டும் என்ற தாகத்தை ஒவ்வொருவரிடமும் காண முடிகிறது. அங்கு ஒரு நல்ல சூழ்நிலை உருவாகியிருந்தால் மட்டுமே களத்தில் இப்படி சிறப்பாக செயல்பட முடியும். இந்த அற்புதமான ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது"

விராட் கோலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com