பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் தோனியால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் என கூறினார் web
கிரிக்கெட்

'4 வயதில் தந்தை இறப்பு.. கிரிக்கெட்டுக்கு வர காரணம் தோனி' - பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி!

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக பெரிய பேசுபொருளாக இருந்தவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உஸ்மான் தாரிக். அவர் தற்போது தோனியால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் என்று கூறியிருப்பது நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Rishan Vengai

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உஸ்மான் தாரிக், தோனியின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்ட எம்.எஸ்.தோனி திரைப்படத்தை பார்த்த பிறகு தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியதாக கூறியுள்ளார். தோனியின் வாழ்க்கை அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது என்றும், அதேபோல தானும் துபாயில் வேலை பார்த்து வந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி, இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் இந்தியாவிற்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் கருதப்பட்டார்.

usman tariq

பந்துவீசும்போது சிறுதுநேரம் நிறுத்தி பந்தைவீசும் அவருடைய அணுகுமுறை, இந்தியாவிற்கு பாதகமாக இருக்கும் என சொல்லப்பட்டது. முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூட உஸ்மான் தாரிக்கிடம் இந்திய வீரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என எச்சரித்தார். போட்டிக்கு முன்னதாக கூட இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், உஸ்மான் தாரிக் போல பந்துவீசியது கவனம் பெற்றது.

உஸ்மான் தாரிக்

இந்தசூழலில் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக இருந்துவரும் உஸ்மான் தாரிக், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்ததற்கு தோனி தான் காரணம் என்றும், அவருடைய கதையை பார்த்தபிறகு தான் நானும் அவருடைய பாதையை பின்பற்றியதாகவும் கூறியுள்ளார்.

தோனியால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன்..

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பையோபிக் திரைப்படமான எம்.எஸ்.தோனி திரைப்படத்தை பார்த்தபிறகே தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்ததாக உஸ்மான் தாரிக் கூறியுள்ளார்.

தோனி எப்படி கிரிக்கெட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் இந்திய ரயில்வேயில் டிக்கெட் சரிபார்ப்பாளராக பணியாற்றினாரோ, அதேபோல தானும் துபாயில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கொள்முதல் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்ததாகவும், தோனியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட எம்.எஸ்.தோனி திரைப்படத்தை பார்த்தபிறகே நான் கிரிக்கெட்டுக்கு திரும்ப வந்ததாகவும் உஸ்மான் தாரிக் கூறியுள்ளார். தோனியின் கதைக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக உணர்ந்ததாக அவர் வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ”எம்.எஸ்.தோனி திரைப்படம் பார்த்த பிறகுதான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, எங்கள் இருவரது கதைகளும் ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் ஒரு வேலையில் இருந்தேன், அவரும் ஒரு வேலையில் இருந்தார். அப்படியான ஒரு நிலையிலிருந்து திரும்பி வரலாறு படைத்த ஒருவர் இங்கே இருக்கிறார் என உணர்ந்தேன். நானும் சாதாரண மனிதன்தான். அதே பாதையை நான் தொடரலாம், ஆனால் மற்றவர்களைப் போல இல்லாமல் நான் நிறைய கடின உழைப்பு செலுத்த வேண்டும். எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய 4 வயதிலேயே தந்தையை இழந்த உஸ்மான் தாரிக், குடும்பத்திற்காக வேலைக்கு செல்லும் ஒரே நபராக இருந்துள்ளார். அதனால் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து விலகி, ஒரு நல்ல வேலையைத் தேடி துபாய்க்குச் செல்லத் தேர்ந்தெடுத்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு எம்எஸ்தோனி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தை பார்த்த அவர், தோனி எப்படி ஒரு டிக்கெட் சரிபார்ப்பாளராக இருந்து திரும்ப வந்து ஒரு அர்ப்பணிப்பான கிரிக்கெட் வீரராக மாறினார் என்பது அவருக்கு பெரிய இன்ஸ்ஃபிரேசனாக இருந்துள்ளது. உஸ்மான் தாரிக்கின் இந்த வெளிப்பாடு கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.