‘அடுத்த 10 ஆண்டுக்கு உங்களுக்கு கோப்பையே கிடையாது..’ கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் பெரிய ஓட்டை!
ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டையே அச்சுறுத்தும் ஒரு அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்தது என்ற கூற்று இருக்கிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு பிறகு அந்த இடத்தை பிடித்துக்கொண்ட ஆஸ்திரேலியா அணி, உலக கிரிக்கெட்டை அச்சுறுத்தும் அணி என்ற கிரீடத்தை இன்றுவரை கீழிறக்கவில்லை.
இடையில் ஆஸ்திரேலியா அணியின் திறன் கொஞ்சம் குறைவது போலத் தெரிந்தாலும், அடுத்தடுத்து அணிக்குள் கம்பேக் கொடுத்த வீரர்கள் அடுத்த தலைமுறைக்கான ஆஸ்திரேலியாவை வழிநடத்தி இன்றுவரை ’கோட் கிரிக்கெட் அணி’ என்ற டேக் லைனை சுமந்து வருகின்றனர்.
ஆனால் ’அச்சுறுத்தும் ஒரு அணி’ என்ற இடத்தை ஆஸ்திரேலியா இழந்துவருவதாகவும், தற்போது அணியிலிருந்து முக்கிய வீரர்கள் ஓய்வுபெரும் இடத்தில் இருப்பதால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளதாகவும் முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போ நீ நடிக்கலையா..
உலக கிரிக்கெட்டில் அதிக முறை ஐசிசி கோப்பை வென்ற அணியாக 6 உலகக்கோப்பை, 2 சாம்பியன்ஸ் டிராபி, 1 டி20 உலகக்கோப்பை, 1 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மொத்தம் 10 கோப்பைகளை வென்று முதலிடத்தில் சிம்மாசனமிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
இருதரப்பு தொடர்களில் ஆஸ்திரேலியா அணி மோசமாக விளையாடினாலும், உலகக்கோப்பை தொடர் என வந்துவிட்டால் தாங்கள் ஒரு சாம்பியன் அணி என பொட்டில் அடித்தார் போல் தரமான கிரிக்கெட்டை விளையாடுவார்கள் ஆஸ்திரேலியா வீரர்கள். அதனாலேயே இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலியா மோசமாக விளையாடினால் கூட ‘சார் நடிக்கிறான் சார், உங்க நடிப்பை ஆரம்பிச்சிட்டிங்களா, வேர்ல்டு கப்புனு வந்துட்டா ஃபார்முக்கு வந்துடுவான்’ என்றெல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் சிலாகிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
ஆனால் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி உலகக்கோப்பையிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறியிருக்கும் நிலையில் ‘அப்போ நீ நடிக்கலையா’ என்பது போலவே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் பெரிய ஓட்டை..
ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல முன்னாள் வீரர்கள் கூட ஆஸ்திரேலியா அணியின் செயல்பாட்டை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுவாக ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பைக்கான தயாரிப்பிலும், அணித் தேர்விலும் சிறந்த ஒன்றையே தயார் செய்யும். ஆனால் 2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தயாரிப்பு மற்றும் அணித்தேர்வு மோசமாக இருந்ததாகவும், ஒருவேளை அவர்கள் உலகக்கோப்பைக்காக தயாராகவே இல்லையா அல்லது உலகக்கோப்பையை எளிதாக எடுத்துக்கொண்டார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் அணியில் ஸ்டார்க், ஸ்மித், ஹசல்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் ஓய்வு பெரும் நிலையில் உள்ளனர். பேட் கம்மின்ஸ், ஆடம் சாம்பா, டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் ஓய்வு பெறுவதற்கான அடுத்த லேயரில் இருப்பதால், ஆஸ்திரேலியா அணி தங்களுடைய டிரான்சிஸன் காலத்தில் இருக்கிறது. இருப்பினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மாற்று வீரர்களை இன்னும் கண்டறியவில்லை என்றும், வேகப்பந்துவீச்சு, ஸ்பின் டிபார்ட்மெண்ட்டில் ஆஸ்திரேலியாவின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் கூட கம்மின்ஸ், ஹசல்வுட் இல்லாத போது அவர்களுக்கு மாற்றாக ஸ்காட் போலந்த் மற்றும் நெசர் போன்ற வீரர்களே இடம்பெற்றனர். அவர்களின் வயதும் 36 மற்றும் 35 என அதிகமானவையே. இந்த சூழலில் தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளதாகவும், அடுத்த வரிசையில் இருக்கும் வீரர்கள் மீதான நம்பிக்கையின்மையே 2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து பேசியிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் மார்க் வா மற்றும் இயன் ஹீலி இருவரும், தவறான அணித்தேர்வும், வீரர்களின் காயமும் அணியை வீழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேப்போல முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கு தயாராகாமல் வந்தது போல இருந்ததாகவும், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தங்களுடைய டிரான்சிஸன் காலத்தில் சிறந்த வீரர்களை கண்டறிந்து அவர்களை தயார்படுத்தவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுக்கு ஆஸ்திரேலியாவால் கோப்பை வெல்ல முடியாது என்றும், ஒன்று இரண்டு சூப்பர் ஸ்டார் வீரர்களை வைத்து உலகக்கோப்பை வெல்ல முடியாது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

