ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் போட்டி நவம்பர் 24ம் தேதி நடைபெற்ற நிலையில், ஜிம்பாப்வே அடித்த 205 ரன்களை அடிக்க முடியாமல் 60 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி.
இந்நிலையில் படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
புலவாயோ ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
146 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்கவீரர்களாக விளையாடிய சையிம் ஆயுப் மற்றும் அப்துல்லா ஷபிக் இருவரும் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
இலக்கு 146 ரன்களாக இருந்த நிலையில், சையிம் ஆயுப் மட்டுமே 113 ரன்கள் குவித்தார். 62 பந்துகளில் 17 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 113 ரன்கள் விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரானது 1-1 என சமன் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 28ம் தேதியன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் இலக்கு 150 ரன்களுக்கும் குறைவாக இருந்தபோது சதமடித்த முதல் வீரராக பாகிஸ்தானின் சையிம் ஆயுப் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நமீபியா அணி 153 ரன்கள் அடித்திருந்தபோது, ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சி ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 103 ரன்களை அடித்து 10 விக்கெட் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
ஸ்காட்லாந்து வீரரின் சாதனையை பாகிஸ்தான் வீரர் சையிம் ஆயுப் முறியடித்துள்ளார்.