உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் முதல் பதிப்பானது கடந்தாண்டு 2024-ல் நடைபெற்றது. அதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றன.
சுரேஷ் ரெய்னா, டேல் ஸ்டெய்ன், ஹர்பஜன் சிங், யூசுப் பதான், கெவின் பீட்டர்சன், பென் கட்டிங், ஷான் மார்ஷ், இம்ரான் தாஹிர், ஷாகித் அப்ரிடி, யுவராஜ் சிங், ஆரோன் பின்ச் மற்றும் பிரட் லீ உள்ளிட்ட பல முன்னாள் சாம்பியன் வீரர்கள் பங்கேற்ற முதல் சீசனில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
சர்வதேச தொடரை போலவே தங்களுடைய கிரிக்கெட் நாயகர்களை பார்க்கவந்த ரசிகர்கள் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடருக்கும் தங்களுடைய ஆதரவை வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.
இந்நிலையில் வெற்றிகரமான முதல் சீசனையடுத்து இரண்டாவது சீசன் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.
2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடரானது ஜுலை 18 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவிருக்கிறது. இந்தியா லெஜெண்ட்ஸ், பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் அணிகள் ஜுலை 20ம் தேதி மோதவிருக்கின்றன. அரையிறுதிப்போட்டிகள் ஜுலை 31ம் தேதியும், இறுதிப்போட்டி ஆகஸ்ட் 2ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங், பாகிஸ்தானுக்கு ஷாஹித் அப்ரிடி, ஆஸ்திரேலியாவிற்கு பிரட் லீ, வெஸ்ட் இண்டீஸுக்கு கிறிஸ் கெயில், இங்கிலாந்துக்கு இயன் மோர்கன், தென்னாப்பிரிக்காவிற்கு ஏபி டி வில்லியர்ஸும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடரின் முதல் ஆட்டமானது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 160 ரன்கள் சேர்த்தது, சிறப்பாக பேட்டிங் செய்த முகமது ஹஃபீஸ் 54 ரன்கள் அடித்து அசத்தினார்.
161 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 155 ரன்கள் மட்டுமே அடித்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதியாக களத்திற்கு வந்த இயான் பெல் 35 பந்தில் 51 ரன்கள் அடித்து போராடினாலும் வெற்றியை பெறமுடியவில்லை. முடிவில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்தது.