மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்-ல் தடைசெய்யப்பட்ட நிலையில், வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று 2027 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். தி ஹண்ட்ரட் தொடரில் உள்நாட்டு வீரராக விளையாடும் அவர், ஐபிஎல் குறித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு பிசிசிஐ தடைவிதித்தது. அதன்படி உலகம் முழுக்க உள்ள மற்ற கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்று விளையாடிவரும் பாகிஸ்தான் வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்துவருகின்றனர். முதலும் கடைசியுமாக தொடக்க சீசனான 2008 ஐபிஎல் தொடரில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் கடைசியாக விளையாடினர்.
இந்த சூழலில் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர், விரைவில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுவிடுவேன் என்றும், ஐபிஎல் தொடரில் விளையாட விண்ணப்பிக்க இருப்பதாகவும் கடந்தாண்டே தெரிவித்தார். ஆனால் அவருடைய பிரிட்டிஷ் குடியுரிமை உறுதியாகாத சூழலில் அவரால் 2026 ஐபிஎல் தொடரில் விளையாட விண்ணப்பிக்க முடியவில்லை.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடந்துவரும் தி ஹர்ண்ட்ரட் தொடரில் உள்நாட்டு வீரராக பங்கேற்றுள்ள முகமது அமீர், ஐபிஎல்லில் பங்கேற்று விளையாடும் தகுதியை பெற்றுள்ளார். 2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதான ஏலத்தில் அவரால் விண்ணப்பிக்க முடியும் என்பதால், தி ஹண்ட்ரட் தொடரின்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஐபிஎல்-இல் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பதிலளித்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அமீர், "நான் 2027-ல் பிஎஸ்எல் தொடரில் ஒரு வெளிநாட்டு வீரராக விளையாடுவேன். ஐபிஎல்-ஐப் பொறுத்தவரை, நான் பங்கேற்பேனா என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை," என்று 'தி ஹன்ட்ரட்' தொடரின் இடையே அமீர் கூறினார்.
அமீர் ஐபிஎல்லில் விளையாட முடியுமா என்று கேட்டால், ஏற்கெனவே முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத் இதேபோன்ற பாதையைப் பின்பற்றி 2011-ல் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2012-2013) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2015) அணிக்காக விளையாடினார்.