ரோகித் சர்மாவால் பதவி இழக்கப்போகும் அஜித் அகர்கர்.. வைரலாக வலம்வரும் செய்தி!
ஒருநாள் உலகக்கோப்பை வெல்லும் கனவுடன் 2027 வரை ஃபிட்டாக தன்னை தயார் செய்து வரும் ரோகித் சர்மாவை, வயது மற்றும் ஃபிட்னஸ் காரணங்களை சுட்டிக்காட்டி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அணியிலிருந்து நீக்க முயன்றதாக தகவல். ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் 138 ரன்கள் குவித்த ரோகித்தை பிசிசிஐ வலுவாக ஆதரித்து, அவர் நிரந்தர உறுப்பினர் என செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணிக்காக வெல்ல வேண்டும் என்ற தீராத வேட்கையை கொண்டவர் ரோகித் சர்மா. 2011 ஒருநாள் உலகக்கோப்பை அணியில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக விராட் கோலி தேர்வுசெய்யப்பட்டபோதே, இந்தியாவிற்காக கோப்பை வெல்லும் கனவு எட்டவில்லையே என்ற ஆதங்கத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.
உலகக்கோப்பை என்றால் அது ஒருநாள் உலகக்கோப்பை தான், சிறுவயது முதலே நான் கனவு கண்டது அதைத்தான் என்று பல முறை கூறியிருக்கும் ரோகித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரண்டு வடிவங்களில் ஓய்வை அறிவித்தபிறகும் 2027 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவோடு பயணித்து வருகிறார். அதை வெறும் வார்த்தையோடு விட்டுவிடாமல் தன்னை ஃபிட்டாக வைத்திருக்க 10 கிலோவுக்கு மேல் எடையை குறைத்திருக்கும் ரோகித் சர்மா, பல்லாயிரம் ரன்களை குவித்தபிறகும் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை பிடிக்க போராடிவருகிறார்.
ரோகித்தின் கனவு இப்படி இருக்கும் சூழலில், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ரோகித் சர்மாவை அணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் பலமுறை ஈடுபட்டுள்ளது. ஃபிட்னஸ் இல்லை, வயது மூப்பு என பல காரணங்களை சுட்டிக்காட்டி ரோகித் சர்மாவை நீக்குவதற்கு கம்பீர் தலைமையிலான குழுவிடம் பலமுறை தேர்வுக்குழு பேசியதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கூட இங்கிலாந்து ஒருநாள் தொடரே ரோகித் சர்மாவின் கடைசி தொடர், லண்டனில் நடக்கும் போட்டியே கடைசி போட்டி, அதைப்பார்க்க ரோகித்தின் குடும்பம் நேரில் பார்க்கவிருக்கிறது என்ற பல செய்திகள் அடுத்தடுத்துவெளியாகின. ஆனால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 138 ரன்கள் குவித்து தேர்வுக்குழுவையும் அணி நிர்வாகத்தையும் திகைக்க வைத்தார்.
இந்தசூழலில் தான் ரோகித் சர்மா விவகாரத்தால் அஜித் அகர்கரின் வேலை பறிபோகும் நிலை உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ரோகித் சர்மாவை நீக்கும் முடிவில் இருந்தாலும், 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டனை இழக்க பிசிசிஐ தயாராக இல்லை என்பது தெரிகிறது.
ரோகித் சர்மாவிற்கு கடைசிப்போட்டி என செய்திகள் கசிந்தபோது, தேர்வுக்குழுவினரிடம் கூட கலந்து பேசாமல் ‘ரோகித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர உறுப்பினர். அவர் அணியில் இருக்கும் வரை நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்காது’ என கூறிய பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்தசூழலில் தான் அடுத்தடுத்த 10 போட்டிகளில் இந்திய அணி தோற்றபிறகு அஜித் அகர்கரின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விரும்பவில்லை என்ற செய்தி கசிந்துள்ளது. ஏற்கனவே அவருடைய பதவிக்காலம் ஜூன் 2026 உடன் முடிவடைய இருந்தநிலையில், பிசிசிஐ அதை அடுத்த மூன்று மாத காலம் நீட்டித்தது. தொடர்ந்து 2027 உலகக்கோப்பை வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிசிசிஐ அந்த திட்டத்திலிருந்து பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அஜித் அகர்கருக்கு பதிலாக விவிஎஸ் லக்சுமனனை தேர்வுக்குழு தலைவராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ பேசிவருதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முடிவுக்கு பின்னால் ரோகித் சர்மாவை நீக்கும் முடிவை அஜித் அகர்கர் எடுத்ததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

