Out or Notout x
கிரிக்கெட்

தொப்பியால் வந்த சோதனை! அவுட்டா? நாட் அவுட்டா? என கிளப்பிய விவாதம்! விதிகள் சொல்வது என்ன?

இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் பேட்ஸ்மேன் விளையாடும்போது அவர் அணிந்திருந்த தொப்பி ஸ்டம்ப் மீது விழுந்து பெய்லை தகர்த்தது. இது அவுட்டா? நாட் அவுட்டா? என விவாதம் தொடர்ந்து வருகிறது.

Rishan Vengai

கிரிக்கெட் விளையாட்டில் பவுல்டு, கேட்ச், லெக் பிஃபோர் விக்கெட் (LBW), ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங் போன்ற ஆட்டமிழப்புகளை கடந்து, மன்கட் அவுட், ஹிட் விக்கெட், டைம் அவுட், ரிட்டயர்டு அவுட், ஃபீல்டிங்கை தடுத்தல் மற்றும் பந்தை இரண்டு முறை அடித்தல் போன்ற ஆட்டமிழப்புகளும் இன்னும் இருந்துவருகின்றன.

அஸ்வின் மன்கட் அவுட்

இந்த ஆட்டமிழப்புகளுக்கான பலவிதிமுறைகள் கிரிக்கெட்டில் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் சில ஆட்டமிழப்புகள் கிரிக்கெட் களத்தில் விவாதத்தை உண்டுசெய்வதை தொடர்ந்து வருகின்றன. அஸ்வினின் மன்கட் அவுட் தொடங்கி, ஆஞ்சிலோ மேத்யூஸின் டைம் அவுட் வரை பல விக்கெட்டுகள் கிரிக்கெட் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

மேத்யூஸ் டைம் அவுட்

இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் விக்கெட்டும் அவுட்டா? நாட் அவுட்டா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுட்டா? நாட் அவுட்டா? விதி சொல்வது என்ன?

ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்றில், பேட்ஸ்மேன் தன்னுடைய ஷாட்டை ஆடிமுடித்தபிறகு அவருடைய பேட் சென்று அவர் தலையில் அணிந்திருந்த தொப்பியை தாக்குகிறது. பின்னர் தொப்பி சென்று ஸ்டம்பின் மீது விழுந்து பெய்லை தகர்க்கிறது. இதைப்பார்த்த ஃபீல்டிங் அணி அப்பீல் செய்ய, கள நடுவர் அவுட் கொடுக்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்து அவுட்டா? நாட் அவுட்டா? என்ற கேள்வியை பஞ்சாப் கிங்ஸ் எழுப்பியுள்ளது. இதைப்பார்த்த பலபேர் இது அவுட்தான் என்றும், அவுட் இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கிரிக்கெட் விதிமுறையின் படி அது அவுட்டா? இல்லையா என்பதை சிறிய நேர இடைவெளிதான் தீர்வுசெய்கிறது. கிரிக்கெட் விதிகளின் சட்டம் 35.2 இன் படி, ஒரு பேட்ஸ்மேன் தனது ஷாட்டை முடித்த பிறகு, அவரது உபகரணங்கள் தொப்பி போன்றவை பெயில்களை அகற்றினால், அது ஹிட் விக்கெட்டாகவும், அவுட்டாகவும் கருதப்படாது. ஆனால் பேட்ஸ்மேன் விளையாடும்போது அது நடந்தால் ’அவுட்’ என்று கொடுக்கப்பட வேண்டும்.

தற்போது பகிரப்பட்டிருக்கும் வீடியோவில் பேட்ஸ்மேன் விளையாடி முடித்துவிட்டாரா, இல்லை ஷாட் முழுமை பெறவில்லையா என்ற குழப்பம் தான் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

வீடியோவை பாருங்கள், நேரத்தைக் கருத்தில் கொண்டு நீங்களே முடிவு செய்யுங்கள், அது அவுட்டா? அல்லது அவுட்டில்லையா?