2026 டி20 உலகக்கோப்பை இறுதியில் இந்தியா-நியூசிலாந்து மோதல் நடக்கவுள்ளது. நியூசிலாந்து அணியால் பல முறை தோல்வி கண்ட இந்தியா, இந்த முறை வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அகமதாபாத்தில் நடக்கவுள்ள போட்டியில், மைதானத்தின் தன்மை வெற்றியை தீர்மானிக்கலாம். இந்தியா வெற்றி பெற்று பழிவாங்கும் என நம்பிக்கை அதிகம்.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணிக்கு வில்லனாக அமையும் ஒரே அணியாக நியூசிலாந்து இருந்துவருகிறது.
இதுவரை நியூசிலாந்து 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள நிலையில், ஐசிசி நாக்அவுட் டிராபி 2000, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டிலுமே இந்திய அணியை தான் இறுதிப்போட்டியில் வீழ்த்தி நியூசிலாந்து கோப்பை வென்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி தோல்வி மற்றும் சொந்தமண்ணில் 0-3 என டெஸ்ட்டில் ஒயிட்வாஷ் என பல மறக்கமுடியாத தோல்விகளை நியூசிலாந்து கொடுத்திருக்கும் நிலையில், இந்தியா அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. நடப்பு உலகக்கோப்பையில் ஒரேயொரு போட்டியை மட்டுமே இந்த மைதானம் நடத்தியுள்ளது. அதில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
மேலும் அந்தபோட்டியில் கருப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதால், இந்தியா தோல்வியை தழுவியது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியிலும் இந்தியா கருப்பு மண் ஆடுகளத்தில் தான் தோற்றது. இதனால் இந்தமுறை வேறு ஆடுகளம் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை மும்பையில் இருப்பது போல சிகப்பு மண் ஆடுகளத்தில் போட்டி நடைபெற்றால், இந்தியா நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தும். மறாக கலப்பு மண் பயன்படுத்தப்பட்டால் அது பவுலர் மற்றும் பேட்ஸ்மேன் இருவருக்குமே சாதகமாக இருக்கும் என்பதால், எந்த ஆடுகளத்தை கியூரேட்டர்கள் தருகிறார்களோ அதைபொறுத்தே வெற்றிவாய்ப்பு இருக்கும் என தெரிகிறது. ஆனால் அனைத்தையும் கடந்து இந்தியா வெற்றிபெற்று நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.