sachin - musheer khan
sachin - musheer khan X
கிரிக்கெட்

29 வருடமாக யாராலும் முறியடிக்க படாத சச்சின் சாதனை.. அவர் முன்னிலையில் வைத்தே உடைத்த முஷீர் கான்!

Rishan Vengai

2024 ரஞ்சிக்கோப்பை தொடரானது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது இறுதிப்போட்டியை கண்டுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம் முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

முதல் அரையிறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி மும்பை அணி பைனலுக்கு தகுதிபெற்றது.

2024 ranji trophy final

இந்நிலையில் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வுசெய்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.

ஷர்துல் தாக்கூர் உதவியால் தப்பித்த மும்பை அணி!

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் டாப் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய முஷீர் கான், அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் தாமோர் முதலிய வீரர்கள் விதர்பாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6, 7, 7, 5 என ஓரிலக்க ரன்களில் வெளியேற 111 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி தடுமாறியது.

இக்கட்டான நிலையில் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அரையிறுதியை போலவே, இறுதிப்போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 37 பந்துகளில் அரைசதமடித்த ஷர்துல் தாக்கூர் 75 ரன்கள் சேர்க்க, முதல் இன்னிங்ஸ் முடிவில் 224 ரன்கள் எடுத்து மும்பை அணி ஆல்அவுட்டானது.

105 ரன்களுக்கு சுருண்ட விதர்பா அணி!

குல்கர்னி

மும்பையை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணி, மூத்த பந்துவீச்சாளர் தவால் குல்கர்னியின் சிறப்பான பந்துவீச்சால் ஸ்டார் பேட்டர்களை எல்லாம் விரைவாகவே இழந்து தடுமாறியது. தொடர்ந்து விதர்பா அணியை எழவே விடாத மும்பை பவுலர்கள் 105 ரன்களில் சுருட்டி அசத்தினர்.

இறுதிப்போட்டியில் சதமடித்த முஷீர் கான்!

ஸ்ரேயாஸ் ஐயர், முஷீர் கான், ரஹானே முதலிய வீரர்கள் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய நிலையில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டனர். அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மோசமாக விளையாடியதால் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், முஷீர் கான் 3 வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே 73 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 95 ரன்கள் என எடுத்து அசத்த, இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்து அசத்தினார். 326 பந்துகளை எதிர்கொண்டு ஒரு திடமான இன்னிங்ஸ் ஆடிய முஷீர் கான் 10 பவுண்டரிகள் உதவியுடன் 136 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

சச்சினின் 29 வருட சாதனையை முறியடித்து அசத்தல்!

ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் தன்னுடைய 19 வயதில் சதமடித்த முஷீர் கான், ரஞ்சிக்கோப்பை பைனலில் சதமடித்த இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.

1994-95 ரஞ்சிக்கோப்பை சீசனின் இறுதிப்போட்டியில் 21 வயதில் சதமடித்திருந்த சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை 29 வருடங்களாக யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சதமடித்த சச்சின் டெண்டுல்கர் மும்பை அணியை 690 ரன்களுக்கு எடுத்துச்சென்று வெற்றிக்கு வழிவகுத்தார். அந்த போட்டியில் சச்சின் இரட்டை சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின்

இந்நிலையில் 29 வருடங்களுக்கு பிறகு சச்சினின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார் முஷீர் கான். இந்த போட்டியை காணவந்திருந்த சச்சின் டெண்டுல்கர் முன்னாலேயே அவருடைய அரிதான சாதனையை முறியடித்துள்ளார் முஷீர் கான்.

சச்சின் - முஷீர் கான்

இதுவரை 47 பைனல்களில் விளையாடி அதில் 41 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கும் மும்பை அணி, 48வது பைனலில் 42வது கோப்பையை வெல்ல டிரைவர் சீட்டில் உள்ளது. 3வது நாளான இன்று 418 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 538 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது மும்பை அணி. 539 ரன்கள் என்ற இலக்குடன் விதர்பா அணி விளையாடி வருகிறது. ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

காலிறுதி (இரட்டைசதம்) - அரையிறுதி (அரைசதம்) - இறுதிப்போட்டி (சதம்)- தடம் பதிக்கும் முஷீர்!

நடப்பு ரஞ்சி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் 203* (357) ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார் முஷீர் கான். அதேபோல், அரையிறுதிப் போட்டியில்ம் 55(231) ரன்கள் எடுத்து அணிக்கு உதவி இருந்தார். அந்த வரிசையில் இறுதிப் போட்டியிலும் 136 (326) ரன்கள் எடுத்து தன்னுடைய இடத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இவரது சகோதரர் சர்ஃபராஸ் கான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சதங்களை விளாசி தற்போது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது முஷீர் கானும் காத்துக் கொண்டிருக்கிறார். இவரது சிறப்பே நீண்ட நேரம் களத்தில்நின்று விளையாடுவது தான். அதிரடியை காட்டிலும் நிதானமாக தூணாக நின்று அணிக்கு உதவுவதில் வல்லவராக இருக்கிறார் முஷீர் கான். 3 நாக் அவுட் போட்டிகளில் மட்டும் ரஞ்சி டிராபியில் விளையாடி 433 ரன்கள் குவித்து அசத்தி புதிய வாய்ப்புகளை விஸ்தரப்படுத்தியுள்ளார் முஷீர் கான்.