தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- செ.யுகேஷ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின், உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஐபிஎல் வரை தன்னுடைய திறமையால் தனி அடையாளம் உருவாக்கிய வீரர்களில் ஒருவர். லெக் ஸ்பின்னராக விளங்கிய அவர், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக பல முக்கியப் போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக சையத் முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் ரஞ்சிப் போட்டிகளில் கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் கவனம் பெற்றார். தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டு தனது பெயரை இந்திய அளவில் பிரபலப்படுத்தினார்.
2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் Rising Pune Supergiant அணிக்காக அறிமுகமான முருகன் அஸ்வின், தனது கூக்ளி மற்றும் வேக மாறுபாட்டால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு Royal Challengers Bengaluru, Punjab Kings, Mumbai Indians மற்றும் Rajasthan Royals உள்ளிட்ட பல அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஐபிஎல்லில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அவர், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமையால் அணிகளுக்கு முக்கிய வீரராக இருந்தார். எனினும், முருகன் அஸ்வின் இந்திய அணியில் அதிக வாய்ப்புகளை பெறவில்லை. ஆனாலும், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். 2017ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடும் போட்டி காரணமாக தேசிய அணியில் நிலையான இடம் அமையவில்லை. இருப்பினும் தமிழ்நாடு மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தார்.
இந்த நிலையில், 35 வயதான முருகன் அஸ்வின், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர், "சிறு வயது முதலே நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். அன்றுமுதல் இன்றுவரை நான் கிரிக்கெட்டை ஆழமாகக் காதலித்து வருகிறேன். தோனி, கோலி மற்றும் ரோகித் தலைமையில் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எப்போதும்போல அதே உத்வேகத்துடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். அதிக விளம்பர வெளிச்சம் இல்லாமல், தன்னுடைய திறமையால் மட்டுமே ஐபிஎல் மற்றும் இந்திய அணிவரை சென்றடைந்த அவரது பயணம், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓர் உத்வேகமாக பார்க்கப்படுகிறது.