அபிஷேக் சர்மா ஒரு சாதாரண ஸ்லாக் பேட்ஸ்மேன் என விமர்சித்த முகமது அமீர் web
கிரிக்கெட்

”அபிஷேக் சர்மா பந்தை பார்த்து சுத்தும் ஒரு சாதாரண வீரர்..” - முன்னாள் பாகிஸ்தான் வீரர்

அபிஷேக் சர்மா வெறும் பந்தை பார்த்து பேட்டை சுத்தக்கூடிய சாதாரண பேட்ஸ்மேன் தான், அவரை எளிதாக அவுட்டாக்கி விடலாம் என முன்னாள் பாகிஸ்தான் பவுலர் விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று, டி20 கிரிக்கெட்டில் அசத்தலான சாதனைகளை படைத்து வருகிறார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், அவரை வெறும் பந்தை பார்த்து சுத்தும் சாதாரண வீரர் என விமர்சித்துள்ளார். ஆனால், அபிஷேக் சர்மாவின் திறமையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிடம் பிரத்யேகமாக பயிற்சி பெற்றுவரும் அபிஷேக் சர்மா, டி20 கிரிக்கெட்டில் அச்சுறுத்தும் ஒரு பேட்ஸ்மேனாக உருமாறியுள்ளார். 12 பந்தில் அரைசதமடித்து தன்னுடைய குருவான யுவராஜ் சிங்கின் சாதனையை சமீபத்தில் சமன்செய்த அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைவான பந்தில் 1000 ரன்களை விளாசிய வீரராக மாறி உலகசாதனை படைத்துள்ளார்.

அபிஷேக் சர்மா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 190 ஸ்ட்ரைக்ரேட் உடன் அதிக ஸ்ட்ரைக்ரேட் வைத்திருக்கும் முதல் வீரராக மிரட்டிவரும் அபிஷேக் சர்மா, டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்புள்ள வீரராக பலபேரால் சொல்லப்பட்டு வருகிறார்.

இந்தசூழலில் இப்படியான ஒரு வீரரை வெறும் பந்தை பார்த்து மட்டும் சுற்றக்கூடிய சாதாரண வீரர் தான் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் விமர்சித்துள்ளார்.

அபிஷேக் சர்மா ஒரு சாதாரண வீரர்..

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை போட்டியானது நாளை மறுநாள் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற உள்ளது. இதில் அபிஷேக் சர்மா கேம் சேஞ்சராக இருப்பார் என பார்க்கப்படும் நிலையில், அவரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்.

முகமது அமீர்

அபிஷேக் குறித்து பேசியிருக்கும் அவர், ”அபிஷேக் ஷர்மா பந்தை பார்த்து பேட்டை சுற்றக்கூடிய ஒரு சாதாரண ஸ்லாக் பேட்ஸ்மேன் (Slogger) தான். அவரிடம் முறையான பேட்டிங் நுட்பங்கள் எதுவும் கிடையாது, அதனால் அவர் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேனைச் சமாளிப்பது கடினமான காரியமல்ல. உடலை நோக்கி பந்து வீசினாலே அவர் திணறிவிடுவார். அதுமட்டுமின்றி, வேகம் குறைத்து வீசப்படும் ஸ்லோ பந்துகளையும் எதிர்கொள்ள தடுமாறுவார்” என விமர்சித்துள்ளார்.