மெக் லானிங்
மெக் லானிங் cricinfo
கிரிக்கெட்

WPL: 67 அரைசதம், 3 சதம்! அதிவேகமாக 9,000 டி20 ரன்கள் குவித்து மெக் லானிங் சாதனை! டெல்லி அணி வெற்றி!

Rishan Vengai

மகளிருக்கான 2024 ஐபிஎல் தொடரானது கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்தாண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை அணி கோப்பை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசனில் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விளையாடிய 3 போட்டிகளிலும் ஒரு வெற்றியை கூட பதிவுசெய்யாத குஜராத் அணி முதல் வெற்றியை தேடி நேற்று களம்கண்டது.

67வது டி20 அரைசதம் அடித்த லானிங்!

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷபாலி வர்மா சிக்சர் பவுண்டரி என அதிரடியாக தொடங்கினார். ஆனால் 13 ரன்னில் ஷபாலி வெளியேற, அடுத்து கைக்கோர்த்த கேப்சி மற்றும் கேப்டன் மெக் லானிங் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளாக விரட்ட 6 ஓவரில் 50 ரன்களை கடந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

மெக் லானிங்

கேப்சி 27 ரன்களில் நடையை கட்ட, 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என வெளுத்துவாங்கிய லானிங் தன்னுடைய 67வது டி20 அரைசதத்தை பதிவுசெய்தார். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மிகப்பெரிய மைல்கல்லை எட்டினார். லானிங்கின் 55 ரன்கள் உதவியால் டெல்லி அணி 163 ரன்கள் சேர்த்தது.

அதிவேகமாக 9000 டி20 ரன்கள் அடித்து சாதனை!

பெண்கள் டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களை பதிவுசெய்த மெக் லானிங், குறைவான போட்டிகளில் இதை படைத்த முதல் வீராங்கனையாக மாறி சாதனை படைத்தார். ஏற்கனவே ஷோபி டெவின் 297 இன்னிங்ஸ்கள் மற்றும் பெத் மூனி 299 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை அடித்திருந்த நிலையில், மெக் லானிங் 289 இன்னிங்ஸ்களில் அடித்து டெவின் மற்றும் மூனியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

மெக் லானிங்

பெண்கள் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்கள் குவித்தவர்கள்:

1. 289* இன்னிங்ஸ்கள் - மெக் லானிங்

2. 297 இன்னிங்ஸ்கள் - சோஃபி டெவின்

3. 299 இன்னிங்ஸ்கள் - பெத் மூனி

4. 323 இன்னிங்ஸ்கள் - சுசி பேட்ஸ்

மெக் லானிங் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்கள் மற்றும் 67 அரைசதங்களுடன் 9000 ரன்களை குவித்துள்ளார். 164 என்ற இலக்கை விரட்டிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.