ரோகித் கேப்டன்சி மாற்றம் குறித்து ஹெய்டன் கருத்து web
கிரிக்கெட்

ரோகித் கேப்டன்சி நீக்கம்| 'சுவாரசியமான நடவடிக்கை..' சாதகமான விசயங்களை அடுக்கும் ஹெய்டன்!

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு களத்திற்கு வருவதை இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியர்கள் கூட விரும்புகிறார்கள் என்று மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்..

Rishan Vengai

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு களத்திற்கு வருவதை இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியர்கள் கூட விரும்புகிறார்கள் என்று மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்..

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ரோகித் - கோலி

இதில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒருநாள் அணிக்கும் சுப்மன் கில்லே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒருபக்கம் வரவேற்பையும், மறுபக்கம் விமர்சனத்தையும் பெற்றநிலையில், இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன்..

கோலியை ஆஸ்திரேலியர்கள் கொண்டாடுகிறார்கள்..

சமீபத்தில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் ஹெய்டன், அதை சுவாரசியமான முடிவு என்றும், அவர்கள் ரோகித் களத்தில் இருக்கும்போதே கில்லை கேப்டன்சியில் மெருகேற்ற விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கில் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் ஹெய்டன், "சாம்பியன்ஸ் டிராபி போன்ற மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஒரு சுவாரஸ்யமான நடவடிக்கை. அவர்கள் ரோகித்தின் வயது முதிர்வு ஒரு பாதிப்பாக இருக்கும் என்பதை பார்க்கிறார்கள். ஆனால் இந்தியா மூத்தவீரர்கள் மற்றும் இளம்வீரர்கள் என சிறந்த கலவையாக ஒருநாள் வடிவத்திற்கு ஏற்றதாக உள்ளது.. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் உள்ள அணியில் ஜெய்ஸ்வால் போன்ற இளம்வீரர் இருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது..

ரோகித் சர்மா

சுப்மன் கில்லை அனைத்து வடிவத்திற்கும் கேப்டனாக அழைத்து வருவது, ரோகித் சர்மா டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும்போதே தலைமைத்துவத்தைக் கற்றுக்கொள்வதற்கான இன்சூரன்ஸ் பாலிசியாக நான் நினைக்கிறேன்.. ஒருவேளை ரோகித்சர்மா 2027 உலகக் கோப்பைக்கு முன்னேறினால் அது ஒரு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு போனஸாக இருக்கும்" என்று பேசியுள்ளார்.

விராட் கோலி

மேலும் விராட் கோலியை ஆஸ்திரேலியர்கள் நேசிக்கிறார்கள் என்று பேசியிருக்கும் ஹெய்டன், "ஆஸ்திரேலிய ரசிகர்களை பொறுத்தவரையில், அவர்கள் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களைப் பார்ப்பதை மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் விராட் கோலியை தங்கள் சொந்தத்தைப் போலவே கொண்டாடுகிறார்கள், ரோகித் சர்மாவுக்கும் இது பொருந்தும். கூட்டம் அற்புதமாக இருக்கும். பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியம் முற்றிலும் அற்புதமான இடம், மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இங்கு வாழ்ந்து வேலை செய்வதால், நம்பமுடியாத ஆதரவு இருக்கும். அவர்கள் விராட்டைக் கொண்டாடுவார்கள், அவர்கள் ரோகித்தை கொண்டாடுவார்கள். மேலும் பல ஆஸ்திரேலியர்கள் விராட் கோலி மீதான அன்பால், இந்தியா வெற்றி பெறவேண்டும் என விரும்புவார்கள்" என பேசியுள்ளார்.