2026 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எய்டன் மார்க்ரம் 19 பந்தில் அரைசதமடித்து மிரட்டினார். 176 ரன்கள் இலக்கை 17.1 ஓவரில் எட்டிய தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பாக நடந்துவருகிறது. இன்று 3 போட்டிகள் நடைபெறும் நிலையில் முதலிரண்டு போட்டிகளில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள், ஓமன் மற்றும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றன.
இந்நிலையில் இன்றைய நாளின் கடைசி போட்டி பலம் வாய்ந்த நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் வெறும் 175 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 17 பந்தில் 31 ரன்னும், மார்க் சாப்மன் 26 பந்தில் 48 ரன்களும், டேரில் மிட்செல் 32 ரன்களும் அடித்து அசத்தினர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ யான்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
176 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 19 பந்தில் அரைசதமடித்து மிரட்டினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் மார்க்ரம் 86 ரன்கள் அடிக்க 17.1 ஓவரில் இலக்கை எட்டிய தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.