csk vs lsg cricinfo
கிரிக்கெட்

CSK-ன் பிளேஆஃப் கனவை இருட்டாக்கிய LSG.. இனி என்ன வாய்ப்பெல்லாம் இருக்கிறது..?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றியை பதிவுசெய்தது.

Rishan Vengai

சிஎஸ்கேக்கு பிளேஆஃப் நுழைவு முக்கியமாக இருந்த லக்னோவிற்கு இடையேயான போட்டியில், தொடக்க வீழ்ச்சிக்குப் பிறகு 20 வயது கார்த்திக் சர்மா 42 பந்தில் 71 ரன்கள் அடித்து அணியை 187 வரை இட்டுச் சென்றார். ஆனால் லக்னோவின் மார்ஷ், இங்கிலிஸ் ஜோடி சிஎஸ்கே பவுலிங்கை சிதறடித்து 188 இலக்கை எளிதில் கடந்ததால், 12 போட்டியில் 6 வெற்றியுடன் சிஎஸ்கே கடைசி 2 ஆட்டங்களில் கட்டாய வெற்றி நிலைக்கு தள்ளப்பட்டது.

19வது ஐபிஎல் சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிரட்டலான தொடக்கத்தை பெற்று புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் போகப்போக மற்ற அணிகள் தங்களுடைய ஃபார்மிற்கு திரும்ப புள்ளிப்பட்டியலில் பரமபத விளையாட்டு நடந்துவருகிறது.

சிஎஸ்கே, 2026

முதல் 7 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் மிரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோற்றிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு பிரகாசமானது.

இந்தசூழலில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றால் பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்ற நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்க வீரர்களான அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் விரைவாகவே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்துவந்த உர்வில் பட்டேலும் 6 ரன்னுக்கு நடையை கட்ட, இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டது சிஎஸ்கே. ஆனால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 20 வயது கார்த்திக் சர்மா தன்னுடைய திறமை என்னவென்பதை காட்டினார். தனியாளாக போராடிய அவர் 5 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 42 பந்தில் 71 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை சேர்த்தது சிஎஸ்கே.

கார்த்திக் சர்மா

188 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய லக்னோ அணியில் தொடக்க ஜோடியான மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இருவரும் 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அங்கேயே சிஎஸ்கேவின் கையிலிருந்து ஆட்டத்தை பறித்தனர். 38 பந்தில் 90 ரன்கள் விளாசிய மிட்செல் மார்ஷ் மிரட்டிவிட்டார். 17 ஓவரிலேயெ இலக்கை எட்டிய லக்னோ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

மிட்செல் மார்ஷ்

லக்னோ உடனான இந்த தோல்வியால் 12 போட்டியில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி 2 போட்டிகளில் ஹைத்ராபாத் மற்றும் குஜராத் உடன் மோதவிருக்கிறது சென்னை அணி. முந்தைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ், இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இரண்டு அணிகளும் பிளேஆஃப் கனவுடன் இருந்த அணிகளை கீழிறக்கிவிட்டுள்ளன.