2026 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பிற்காக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வெஸ்ட் இண்டீஸ் 195 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 196 ரன்கள் இலக்கை நோக்கி போராடுகிறது. இதுவரை இந்தியா 173 ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்துள்ளது என்பதால், இந்த போட்டி பரபரப்பாக மாறியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து முதலிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
மீதமிருக்கும் 4வது அணி எது என்ற கேள்விக்கான விடைக்காக இன்றைய சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் சேஸ் இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
ஷாய் ஹோப் 32 ரன்கள், சேஸ் 40 ரன்கள் மற்றும் ஹெட்மயர் 27 ரன்கள் என நல்ல டோட்டலுக்கு அடித்தளம் போட, கடைசிவரை களத்தில் நின்ற ஹோல்டர் 37 மற்றும் பவல் 34 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 195 ரன்களை குவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
டி20 உலகக்கோப்பையில் இதுவரை இந்தியா 173 ரன்களை மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்திருக்கும் நிலையில், 196 ரன்கள் இலக்கை இந்தியா சேஸ் செய்வார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.