பில்வாரா கிங்ஸ் அணி
பில்வாரா கிங்ஸ் அணி ட்விட்டர்
கிரிக்கெட்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: 19 பந்துகளில் 65 ரன்கள்.. காம்பீர் அணியைப் பந்தாடிய இர்ஃபான் அணி!

Prakash J

’லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடரின் இரண்டாவது சீசன், நேற்று (நவ.18) ராஞ்சியில் தொடங்கியது. இத்தொடர் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 22 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில், மொத்தம் 19 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

india capitals

இதில், இந்தியா கேப்பிடல்ஸ், பில்வாரா கிங்ஸ், மணிப்பால் டைகர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பனைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் ஆரோன் ஃபின்ச் தலைமையில், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற அணி புதிதாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”இஸ்ரேல் பிரதமரை சுட்டுக்கொள்வதற்கான நேரமிது” - கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு!

இந்த நிலையில், நேற்று ராஞ்சியில் மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கெளதம் காம்பீரின் இந்தியா கேப்பிடல்ஸ் அணியும், இர்ஃபான் பதானின் பில்வாரா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

gamphir

இதில் முதலில் பேட் செய்த இந்தியா கேப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் கெளதம் காம்பீர் 35 பந்துகளில் 63 ரன்களும், கே.எட்வர்ட்ஸ் 31 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர். பில்வாரா கிங்ஸ் அணியில் அனுரீட் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையும் படிக்க: தொடங்கியது உலக கோப்பை இறுதிப்போட்டி.. இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்து ஒரு அலசல்

பின்னர் சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய பில்வாரா கிங்ஸ் அணியில் தொடக்க பேட்டரான சோலமன் மிர் அதிரடி காட்டினார். அவர் 40 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் இர்ஃபான் பதான் 19 பந்துகளில் 1 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் மூலம் 65 ரன்கள் எடுத்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் அவ்வணி, 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நடப்புச் சாம்பியனான இந்தியா கேப்பிடல்ஸை, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் பில்வாரா கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்தியா கேப்பிடல்ஸ் அணியில், இசுரு உடானா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையும் படிக்க: INDvAUS | "100 சதவீதம் இந்தியாதான் ஜெயிக்கும்" - World Cup Finals குறித்து ரசிகர்கள் கருத்து