முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளாக நிறப்பாகுபாட்டால் பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கருப்பாக இருப்பதால் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த வர்ணனையாளரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடைய ஓய்வு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல ரசிகர்கள் ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், தான் கருப்பாக இருப்பதால் நிறப்பாகுபாடு காட்டப்படுவதாகவும், கடந்த 23 ஆண்டுகளாக முக்கிய வர்ணனைகளில் தன்னை பங்கேற்க அனுமதிக்காமல் புறக்கணிப்பட்டதாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணனின் கிரிக்கெட் வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகளாக குறுகியதாக இருந்தாலும், சிறப்பானதாகவும் அமைந்தது. ஒல்லியான உடலமைப்பு கொண்ட லெக்-ஸ்பின்னரான அவர், தனது 17 வயதிலேயே இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்றார்.
1980-களில் ஒரு தலைசிறந்த லெக்-ஸ்பின்னராகத் திகழ்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், கூர்மையான லெக்-பிரேக், கூக்ளி மற்றும் டாப்-ஸ்பின் பந்துகளை வீசுவதில் தனது அசாதாரண திறமைக்காகப் புகழப்பட்டார். 1985-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டை வென்ற இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக இருந்த அவர், தனது அதிரடி சுழற்பந்துவீச்சால் கேம் சேஞ்சிங் வீரராக ஜொலித்தார்.
1983-ல் அறிமுகம் பெற்று வெறும் ஒன்பது டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு, 1987-ஆம் ஆண்டு அவரது சர்வதேசப் பயணம் முடிவுக்கு வந்தது.
நிறப்பாகுபாடு பற்றி அவர் குற்றச்சாட்டு வைப்பது இது முதல்முறை அல்ல, தனது தோற்றத்தின் காரணமாகத் தான் எவ்வாறு வித்தியாசமாக நடத்தப்பட்டேன் என்பது பற்றி அவர் பலமுறை பகிரங்கமாகப் பேசியுள்ளார். அவர் பதின்பருவத்தில் இருந்தபோது, மும்பையில் உள்ள ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஏனெனில் கருமையான நிறமுள்ள ஒரு சிறுவன் இந்திய கிரிக்கெட் வீரராக இருக்க முடியும் என்பதை ஊழியர்களால் நம்ப முடியவில்லை.
மேலும் தான் விளையாடிய நாட்களில், குறிப்பாக வட இந்தியாவில், இனரீதியான அவதூறுகளை எதிர்கொண்டது குறித்தும் அவர் அவ்வப்போது பேசியுள்ளார். ஆனால் கிரிக்கெட் வர்ணனைகளில் கூட நிறப்பாகுபாடு இருப்பதாக அவர் வெளிப்படுத்தியிருப்பது இதுதான் முதல்முறை..
தன்னுடைய ஓய்வு குறித்து அவர் வெளிப்படுத்தியிருக்கும் பதிவில், டாஸ் போடும் பணி, பிட்ச் ரிப்போர்ட் மற்றும் போட்டிக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நேரடி ஒளிபரப்புகளுக்குத் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்புகள் புதியவர்களுக்கு ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு கோச்சாக சென்றபிறகும் கூட, அந்த பணிசெய்ய தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் நிறப்பாகுபாடு என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், ஒரு ரசிகர், "நீங்கள் கருப்பாக இருப்பதால் உங்களை பரிசளிப்பு நிகழ்வில் அனுமதிக்கவில்லையா?" எனக் கேட்டதற்கு, "நீங்கள் சொல்வது சரி. நிற பாகுபாடுதான்" என கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கும் ஜெய் ஷாவிற்கும் மற்றும் பிசிசிஐ நிர்வாகத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பிசிசியில் உள்ள தனிப்பட்ட ஊழியருக்கு எதிரான பதிவு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அவருடைய இந்த குற்றச்சாட்டு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.