2026 IPL | CSK அணிக்கு பெரிய அடி.. தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்!
2026 ஐபிஎல் தொடருக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி, முக்கிய பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுகிறார். பந்துவீச்சு பலவீனமாக உள்ள நிலையில், அவரின் இல்லாமை அணிக்கு பெரிய பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், இருக்கும் 10 அணிகளும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 18 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் தலா 5 கோப்பைகளுடன் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் அதிக கோப்பைகளுடன் நீடிக்கின்றன. நடப்பு சாம்பியனாக 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற ஆர்சிபி இருந்துவருகிறது.
இந்தசூழலில் 19வது ஐபிஎல் சீசனில் யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கலவையுடன் வலுவானதாக இருக்கிறது.
ஆனால் சென்னை அணியிடம் பந்துவீச்சு அவ்வளவு ஸ்டிராங்காக இல்லாத நிலையில், அவர்களின் கவலையை அதிகரிக்கும் வகையில் முக்கிய பந்துவீச்சாளரான நாதன் எல்லிஸும் தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயத்தால் விலகும் நாதன் எல்லிஸ்..
2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் டாப் 5 பேட்டிங் ‘சஞ்சு சாம்சன், ஆயுஸ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் டெவால்ட் பிரேவிஸ்’ என வலுவானதாகவே இருக்கிறது. ஆனால் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் அவர்களிடம் கலீல் அகமது, மேட் ஹென்றி, முகேஷ் சௌத்ரி, ஜாக் ஃபோக்ஸ், குர்ஜப்னீத் சிங் மற்றும் நாதன் எல்லீஸ் என இருக்கின்றனர். இவர்களில் இந்திய பவுலர்களாக கலீல், முகேஷ், குர்ஜப்னீத் மட்டுமே இருப்பதால், இவர்களில் கலீல் மட்டுமே அனுபவம் வாய்ந்த பவுலராக இருக்கிறார். அவரும் டெத் ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக்கொடுக்கும் பவுலராகவே நீடிக்கிறார்.
இந்தசூழலில் அவர்களின் கீ பவுலராக இருந்தவர் ஆஸ்திரேலியா டி20 அணியில் விளையாடிவரும் நாதன் எல்லீஸ். டெத் ஓவரில் கட்டர் பந்துகள், ஸ்லோவர் டெலிவர், யார்க்கர் என பல வேரியேசன்களை வைத்திருக்கும் அவரால் புதிய பந்திலும் விக்கெட்டை வீழ்த்தமுடியும். பவர்பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என மூன்று நிலைகளிலும் பந்துவீசக்கூடிய ஒருவராக நாதன் எல்லீஸ் இருந்தார்.
ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே காயம் ஏற்பட்டிருந்த தொடை பகுதியில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் 2026 ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி இன்னும் அதை உறுதிசெய்யவில்லை. எல்லீஸ் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

