ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
'நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் படுதோல்வி' என்னும் பதக்கத்துடன் சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்று தரமான கம்பேக் கொடுத்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை அசால்ட்டாக வென்ற ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்செய்தது.
இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரை யார் வெல்வார்கள் என்ற பரபரப்பான சூழல் எட்டியிருக்கும் நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்திருக்கும் நிலையில், கேஎல் ராகுலின் 84 ரன்கள் மற்றும் ஜடேஜாவின் 77 ரன்கள் உதவியால் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் மற்ற ஸ்டார் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில் முதலிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 84 ரன்கள் மூலம் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியின் போதும் இந்தியாவின் திடமாக பேட்ஸ்மேனாக கேஎல் ராகுலே விளங்கினார். முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 77 ரன்கள் எடுத்த அவருடைய ஆட்டமானது இந்தியாவை வரலாற்று வெற்றிபெறுவதற்கு வழிவகுத்தது.
இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் பேட்டிங்கின் சக்சஸ் குறித்து பேசியிருக்கும் கேஎல் ராகுல், அதிகம் வேகம் மற்றும் பவுன்சர்கள் கொண்ட ஆடுகளங்களை நினைத்து கவலைகொள்ளவில்லை, எந்த ஆடுகளமானாலும் முதல் 20-30 ஓவர்களை பவுலர்களுக்கு விட்டுக்கொடுத்து மதிப்பளிக்க வேண்டும். பின்னர் பந்து பழையதாக மாறியபிறகு உங்களுடைய ரன்களை தேற்றவேண்டும். இதுவே என்னுடைய பேட்டிங் திட்டமாக இருந்துள்ளது என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.